திருமா – குஷ்பு சமாதானம்: கருத்து மோதல் களமாக மாறிய ஆழி நூல் வெளியீட்டு விழா

திருமா – குஷ்பு சமாதானம்: கருத்து மோதல் களமாக மாறிய ஆழி நூல் வெளியீட்டு விழா  

ஆழி பதிப்பகம் வெளியிட்ட எட்டு நூல்களுக்கான வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6) சென்னையில் நடந்தது. ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவாக நடந்து முடிந்திருக்க வேண்டிய எங்கள் ஆழி பதிப்பகத்தின் நூல் அறிமுக விழா நேற்று ஒரு மாபெரும் கருத்து மோதல் களமாக மாறியது. ஆனால் அதன் இறுதியில் அது சமாதான சமரசமாக முடிந்தது என்பதும் ஓர் ஆறுதல். 

இதற்கு காரணம் இரண்டு வெவ்வேறு நூல்களை வெளியிடுவதற்காக மீடியாவில் எதிரெதிராக நிறுத்தப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நடிகை குஷ்புவும் முதல் முறையாக ஒரே மேடையில் தோன்றியது தான். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தீண்டப்படாத நூல்கள் என்ற புத்தகத்தை வெளியிட திருமாவளவன் வந்திருந்தார். இந்தியா டுடே எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டு என்ற நூலை கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட குஷ்பு பெற்றுக்கொண்டார்.  இரண்டு அமர்வுகளாக நடந்த இந்த விழாவின் முதல் அமர்வில் காஷ்மீர், கொதிக்கும் பூமி, முட்டம், ரஷோமான் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. சந்திரன் எழுதிய காஷ்மீர் என்கிற மிகப்பெரிய நூலை மண்மொழி இதழின் ஆசிரியர் இராசேந்திர சோழன் வெளியிட, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அஜிதா பெற்றுக்கொண்டார். ரஷோமான் திரைக்கதையை இயக்குநர் நாகா வெளியிட, மின்வெளி நிறுவனத்தலைவர் பி. தனபால் பெற்றுக்கொண்டார். ஆதி வள்ளியப்பன் எழுதிய கொதிக்கும் பூமி என்கிற குளோபல் வார்மிங் பற்றிய முதல் தமிழ் நூலை வானிலைத்துறை இயக்குநர் திரு எஸ்ஆர் ரமணன் வெளியிட, சென்னை ஐஐடி பேராசிரியர் சுதீர் செல்லராஜன் பெற்றுக்கொண்டார்.  வலைப்பதிவர் சிறில் அலெக்சின் நூலை ஆனந்த் நடராஜன் வெளியிட, ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் அமர்வில் கல்யாண்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் நூல் அச்சுவடிவிலும் ஒலிப்புத்தகமாகவும் ஒரே சேர வெளியிடப்பட்டது. வெளியிடுவதற்கு வரவேண்டியிருந்த எழுத்தாளர் வண்ணநிலவன் வர இயலாத நிலையில், கவிஞர் அறிவுமதி அதை வெளியிட, கற்றது தமிழ் பட இயக்குநர் ராம் பெற்றுக்கொண்டார். பவுத்த அய்யனாரின் மேன்ஷன் கவிதைகள் நூலின் மறுபதிப்பை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட எழுத்தாளர் அருண் வெற்றி வேல் பெற்றுக்கொண்டார்.  அதன் பிறகு இரண்டு நூல்கள் வெளியிடப்படவேண்டிய நிலையில், திருமாவளவன் வந்தார். அப்போது மேடையில் முன்னதாகவே கவிஞர் கனிமொழி, குஷ்பு, தமிழச்சி தங்கபாண்டியன், கல்யாண்ஜி, அறிவுமதி உள்பட்டோர் அமர்ந்திருந்தனர். 

திருமாவளவன்  மேடைக்கு வரும் போது மேடையிலிருந்த அனைவரும் அவரை எழுந்து வரவேற்றபோது, அப்போது பேசிக்கொண்டிருந்த தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சையே தொடர்ந்து குஷ்பு கவனித்துக் கொண்டிருந்தார். திருமாவை அவர் பார்க்கவேண்டாம் என தவிர்க்கவிரும்பினாரா அல்லது உள்ளபடியே தமிழச்சியின் பேச்சில் ஆழ்ந்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த context இல் அவர் பார்ப்பதைத் தவிர்க்கவிரும்பியிருப்பதாகவே அனைவருக்கும் பட்டது. ஆனால் பிறகு எசப்பாட்டு நூலைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய குஷ்பு, தான் திட்டமிட்டு அவ்வாறு செய்யவில்லை என்று கூறி, இப்போது வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசும்போதே திரும்பி ஒரு வணக்கம் வைத்தார். அந்த செயலும் அதனூடாக வெளிப்பட்ட உடல்மொழியும் மீண்டும் சிக்கலானது. (திருமணத்துக்கு முந்தைய பாலுறவைக் குறித்த இந்தியா டுடே கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் நீங்கள் எல்லாம் அறிந்ததே. அப்போது திருமாவளவனும் குஷ்பு எதிரெதிர் அணியில் இருந்ததாக மீடியாவில் சித்தரிக்கப்பட்டது). 

இதைத் தொடர்ந்து அந்த மோதல் குறித்து ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டு நூலிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி குஷ்பு படித்தார். குஷ்புவின் பேச்சில் அந்த காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட வலுவான எதிர்ப்பினால் அடைந்த காயம் இன்னும் ஆறவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. இது அவையில் சற்று வெப்பத்தைக் கூட்டிவிட்டது. குஷ்பு பேசிய பிறகு, அடுத்த நூல் வெளியிடுவதற்கு முன்பு, அறிவுமதி தானாகவே வந்து, குஷ்புவின் பேச்சுக்கு மறுமொழி கொடுத்தார்.

ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருப்பது ஒரு ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம் என்று கூறிய அவர், குஷ்புவின் செயல்பாடு குறித்து அதிருப்தியை வெளியிட்டார். தனது தம்பி சுந்தர்சியின் மனைவி என்கிற வகையில் அவர் தனக்கு வேண்டப்பட்டவர்தான் என்று கூறிய அறிவுமதி தனது கருத்தை அவர் வெளியிடும் முறை குறித்து விமர்சித்தார். ஆனால் தொடர்ந்து அவர் பேசிய சில கருத்துகள் – குறிப்பாக தங்கர்பச்சான் விஷயத்தில் குஷ்பு எதிர்கொண்ட விதம் குறித்து – குஷ்புவை வெகுண்டெழச் செய்தது.

தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்று அவர் ஆவேசமாக பேச, பார்வையாளர்களின் ஒரு பகுதியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சில நிமிடங்கள் நாங்கள் ஆடிப்போய்விட்டோம்.  

அந்த தருணத்தில்தான் ஒரு பொறுப்பான தலைவருக்கே உரிய பாணியில் திருமாவளவன் நேரடியாக மைக் அருகில் வந்தார். எதிர் முழக்கம் இட்டவர்களை விரைவில் அமைதியாக்கிய அவர் தொடர்ந்து பேசிய பேச்சுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சும் கூட. அரங்கமே உறைந்துபோகும்படியாக இருந்தது அவர் பேசிய பேச்சு. கற்பு குறித்தும் கருத்துரிமை குறித்தும் அவர் தனது கருத்துகளை விளக்கினார். எந்த கட்டத்திலும் குஷ்புவுக்கு எதிராக தானோ தனது அமைப்பினரோ போராவில்லை என்றும் விதிவிலக்காக சென்னையில் அப்போது குஷ்புவுக்கு எதிராக நடந்த ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தையும் தான் ஏற்வில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். மீடியாவும் குஷ்புவின் எதிரிகளும் தான் இந்த பிரச்னையை பெரிதாக்கினார்களே ஒழிய, தாங்கள் அல்ல என்றார். இந்த பிரச்னையை குஷ்பு கையாண்ட விதமும் அதற்கு ஒரு காரணம் என்பதை அவர் தன் பேச்சினூடாக புரியவைக்க முயன்றார். பெண்ணுரிமை, கற்பு குறித்த கருத்துகளில் தான் குஷ்புவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் முரண்பட்டு நிற்கவில்லை என்று பேசிய திருமா தனக்கும் குஷ்புவுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு முரண்பாடுதானே ஒழிய பகைமுரண்பாடு அல்ல என்று கூறினார். உண்மையில், எந்த தருணத்திலும் தான் குஷ்புவை எதிர்த்து எந்த அரசியலையும் செய்யவில்லை என்கிற அவரது பேச்சு குஷ்பு விவகாரத்தில் திருமா சரிவர நடந்துகொள்ளவில்லை என்று எழும்பியிருந்த ஒரு பிம்பத்தை உடைத்தெறிவதாகத் தோன்றியது. இந்த வகையில் அவரது பேச்சு திருமாவளவனின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நற்சேதியாகத்தான் இருந்தது என்பதை அதன் பிறகு எனக்கு தொடர்ந்து வரும் தொலைபேசி பேச்சுகள் புலப்படுத்தின. 

இங்கே நானும் ஒரு தன்னிலை விளக்கம் தரவேண்டியிருக்கிறது. திட்டமிட்டு, விளம்பர நோக்கோடு இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனையும் குஷ்புவையும் ஒரே சேர நாங்கள் அழைத்ததாக சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.  நடந்தது இதுதான். இந்த நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை முடிவு செய்யும் பொறுப்பை நான் அந்தந்த நூலுக்கான ஆசிரியர்களிடமே விட்டிருந்தேன். நடராஜன் முதலில் நடிகர் சிவக்குமாரையும் பிறகு சத்யராஜையும் வெளியிட அழைக்க முயன்றார். நேரமின்மை காரணமாக அது நடக்காமல் போனது. பிறகு குஷ்புவைத் தொடர்பு கொண்ட போது அவர் ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட அதே நாளில் அதே மணி நேரங்களில்தான் ஸ்டாலின் ராஜாங்கமும் திருமாவளவனின் ஒப்புதலைப் பெற்றார். தீடிரென்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் தோன்றும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, நானும் நடராஜனும் பேசிக்கொண்டிருந்தபோது, சங்கடமான சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது. குஷ்புவிடம் அவர் தொடர்பு கொண்டு திருமாவளவன் வருவதைப் பற்றி சொன்னபோது, அவர் மீது தனக்கு வருத்தமில்லை என்றார் குஷ்பு. திருமாவளவனிடம் குஷ்பு வருவது குறித்து பேசுவதற்கு நான் முழுமையாக முயற்சி செய்யவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவரிடம் அழைப்பிதழை அளித்தபோது, அவர் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. உண்மையில் அவருக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்பதுதான் அவர் பேச்சினூடாக வெளிவந்த தகவலும். மேடையில் திருமாவின் பேச்சுக்கு பின், குஷ்பும் தணிந்திருந்திருந்ததாகவே பட்டது.

மேடையில் மீண்டும் கனிமொழி, தமிழச்சி, திருமாவளவன், குஷ்பு ஆகியோர் புகைப்படக்காரர்கள் சூழ தங்களுக்குள் பேசிக்கொண்டபோது, திருமாவளவனுக்கு வணக்கம் சொன்ன விதம் நக்கல் செய்வதல்ல என்றும் அது நோக்கமே அல்ல என்று மீண்டும் வலியுறுத்தி கூறினார் குஷ்பு. திருமாவளவனும் கூலாக அதை எதிர்கொண்டார் என்றே தெரிந்தது. இந்த களேபரத்தில் நூல் வெளியிடும் விதம் முற்றிலும் மாறிப்போனது. கடைசியில், திருமாவளவன் நூலை வெளிக்காட்ட குஷ்பு அதைப் பெற்றுக்கொண்டார்! 

இப்போது காலையில் பார்த்தால் மீடியாக்காரர்கள் தங்கள் வேலையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிகிறது. குஷ்பு பாதியில் வெளியேறியதாக தினத்தந்தி எழுதியிருக்கிறது. முன்னதாகவே அவர் நிகழ்ச்சியின் இடையில் போவதாகத் தான் இருந்தது என்றாலும், இறுதிவரை அவர் நிகழ்ச்சியில் மேடையிலேயே இருந்தார்.  அதி அவசரத்தில் இந்த பதிவை நான் எழுதுகிறேன். மேலதிக விவரங்களோடு மேலும் எழுதுகிறேன். புகைப்படங்களுடன்.  

7 Comments »

  1. cvalex said

    Interesting. என்னோட புத்தகம் யார் வெளியிட்டாங்கண்ணு போடலியே. 🙂

  2. zsenthil said

    மன்னிக்கவேண்டுகிறேன். புதுப்பித்துவிட்டேன். ரொம்ப அவசரமாக எழுதிய பதிவு..

  3. இதை நீங்கள் பதிவு செய்தது ரொம்ப நல்ல விஷயம். இல்லையென்றால் மீடியாகாரர்கள் சொல்வதுதான் நடந்தது என்று ஆகிவிடும்.

  4. Senthil,

    As a spectator of this event, I must first congratulate Aazhi for conducting a good meeting. My view is that Kushboo could have been more graceful. All the speakers were very clear in their questions and views and they treated her with respect. Thol. Thirumavazhavan spoke extremely well. I admire him for the maturity he demonstrated in tone and content. Obviously, who ever was present there in the meeting, sure would have gone with a feeling that it was Kushboo who simply triggered the whole controversy, when she decided to salute Thol, after she went to the dias. Here, look at Kanimozhi she stood up and greeted Thol as he arrived. That is maturity. Kanimozhi also spoke few points which were in the right direction. Many look down economic prosperity as US imperlism. As a democratic nation, we have choices and the people have choices too. The assertion that Dravidianism has been diluted was countered well by her. Also the explanation for having different opinions by Thol was very good. Sometimes, in the national media, as a state we are not being projected as we should be. Healthy debates such as the one took place will be twisted and reported as sensational event, because people like Kushboo speak their mind, without any content. Individuals liberty should not misunderstood as something that people can advocate the same as public rules. – Thanks for organizing an event like this. –

  5. Senthil Nathan said

    Hi Spectator,

    You have summed it up excellently and exactly. Thanks for your comment:-)

    Senthil

  6. ரோஸாவசந்த் said

    //எந்த கட்டத்திலும் குஷ்புவுக்கு எதிராக தானோ தனது அமைப்பினரோ போராவில்லை என்றும் விதிவிலக்காக சென்னையில் அப்போது குஷ்புவுக்கு எதிராக நடந்த ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தையும் தான் ஏற்வில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். மீடியாவும் குஷ்புவின் எதிரிகளும் தான் இந்த பிரச்னையை பெரிதாக்கினார்களே ஒழிய, தாங்கள் அல்ல என்றார். இந்த பிரச்னையை குஷ்பு கையாண்ட விதமும் அதற்கு ஒரு காரணம் என்பதை அவர் தன் பேச்சினூடாக புரியவைக்க முயன்றார். பெண்ணுரிமை, கற்பு குறித்த கருத்துகளில் தான் குஷ்புவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் முரண்பட்டு நிற்கவில்லை என்று பேசிய திருமா தனக்கும் குஷ்புவுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு முரண்பாடுதானே ஒழிய பகைமுரண்பாடு அல்ல என்று கூறினார். //

    இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது. “சுகாசினியை நடமாட விடக்கூடாது; குஷ்பு பேசியது ஒரு அத்து மீறல்” என்றெல்லாம் கருத்துக்களை விட்டவர் திருமா; குறிப்பாக சன் நியூஸில் நடந்த ஒரு விவாதத்தில் திருமா பேசி பதிவாகிய கருத்துக்கள், திருமாவின் மேலே உள்ள கருத்துக்கள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்தும். திருமா தாராளாமாய் தனது கருத்தை மாற்றிகொள்ளலாம். அது வரவேற்க தக்கது; அதற்கு முன் கடந்த காலத்தில் குஷ்பு மீது தொடுத்த ஒரு அராஜக தாக்குதலுக்கு மன்னிப்பு, குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்த பிறகு மாறினால் நன்மை பயக்கும். மற்றபடி இது போன்ற பீலாக்களால் எந்த நண்மையும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இதன் பிண்ணணி என்னவென்று ஆராய்வது மட்டுமே அறிவுடமை என்று தோன்றுகிறது.

  7. Sridhar Narayanan said

    அருமையான பதிவு.

    திருமாவின் கருத்துகள் வரவேற்க்கதக்கவை. ஆனால் குஷ்பு-திருமா பிரச்னை நடைபெற்றபொழுது அது மீடியாவினால் மட்டும் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக தோன்றவில்லை. பல இடங்களில் அவருக்கு அவமதிக்கும் முறையில் கண்டன கூட்டங்கள் நடைபெற்றன. இன்றளவும் பல கேஸ்கள் நிலுவையில் இருக்கின்றன.

    இயக்குநர் சீமான் ஒரு படி மேலே போய் நடிகை சுகாசினியை கடுமையாகவே கண்டனம் செய்திருந்தார். ஆனால் கடந்த வாரம் அனுஹாசனின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய பொழுது இருதரப்பும் இந்த நிகழ்ச்சிகளை மறந்து விட்டது போல்தான் இருந்தது.

    மீடியாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மீடியாவின் கவனத்தை பெறுவதற்காக சம்பந்தபட்டவர்கள் பல்வேறு வகையில் முயன்றுள்ளதாகவே தெரிகிறது.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a comment