Archive for தமிழ்

1000 நாளில் 1,00,000 தமிழ்க் கட்டுரைகள் – விக்கிபீடியாவில்…

சென்னையில் நேற்று நடந்த, பன்னாட்டுத் தாய்மொழி நாள் சிறப்புச் சந்திப்பு கிட்டத்தட்ட வெற்றிகரமாகத்தான் நடந்தது என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்ச்சியின் இறுதியில்

விக்கிபீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகளை வெளியிடுதற்கான இயக்கம் ஒன்றைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முதலில் நிகழ்ச்சிக்கான பின்புலம்:

பன்னாட்டு தாய்மொழி நாளை ஒரு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது. இந்த ஆண்டு அதை பெரிய அளவாக இல்லையென்றாலும் சிறு

அளவிலாவது நினைவுகூர வேண்டும் என்று தோன்றியதால் ஒரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்ய முயன்றேன். ஆர்வம் உள்ள நண்பர்கள் அதை வெற்றிகரமான ஒரு சந்திப்பாக

ஆக்கிவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

பிப்ரவரி 21 – வியாழன் வேலை நாள் என்பதால் பலருக்கு வரவாய்ப்பில்லாமல் போனது என்றாலும், வந்திருந்தவர்கள் பல் வேறு துறையினராக இருந்தது சிறப்பு. சூளைமேடு நெல்சன்

மாணிக்கம் சாலையில் சாஃப்ட்வியூ விஷுவல் கம்யூனிகேஷன் நிறுவனம் அன்புடன் அளித்த இடத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து தினமணி்க்காக நான் எழுதிய கட்டுரை ஒன்று வரக்கூடும். வந்த பிறகு அதை வலையேற்றுகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், 1952 இல் பிப்ரவரி 22 ஆம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷில்), உருது மொழித்திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில்

பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். அந்த நாளை முன்னிட்டு, 1998 இல் யுனெஸ்கோ அமைப்பு பன்னாட்டு தாய்மொழி நாள் என்ற புதிய தினத்தை அறிவித்தது. சிறுபான்மையர் மொழிகள்,

சிறு மொழிகள், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள், இன மொழிகள் என பலவித பெயர்களில் அறியப்படும் மொழிகளையும் பிற மொழிகளையும் அந்தந்த மொழியினர் கொண்டாட

வேண்டியதற்கான அவசியம் எழுந்திருப்பதே விசித்திரமான விஷயம் தான். காதல் காணாமல் போகும் போதுதானே காதலர் தினம் கொண்டாட வேண்டியிருக்கிறது!

சரி, நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வருவோம். வளர்தொழில் வெளியீட்டாளர் திரு ஜெயகிருஷ்ணன், சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்கள் தலைவர் திரு. மா

ஆண்டோபீட்டர், பிஎஸ்ஜி லெதர்லிங்க்ஸ் தலைவர் திரு மா சிவக்குமார், மின்வெளி நிறுவனத்தின் தலைவர் திரு பி தனபால், சன் நியூஸ் செய்தி ஆசிரியர் திரு. திருஞானம், தென்திசை பதிப்பாளர் திரு திருமாவேலன்,  தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் கஜேந்திரன், எழுத்தாளர்கள் சந்திரன், ஆதி வள்ளியப்பன், தமிழ் அன்பர்கள் ச.சிவகுமார், தமிழ் முகிலன், சுந்தரராஜன், பாலசுப்பிரமணியம்,  மொழிபெயர்ப்பாளர் மாரி கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

மொழி வளர்ச்ச்சியின் திசைவழியையும் அதன் சமூகப் பொருளாதார பின்புலம் குறித்தும், மொழி வள மேம்பாடு குறித்தும் ஒரு நீண்ட பவர்பாயின்ட் விளக்கக்காட்சியை நான் அளித்தேன்.

(அதை விரிவாக்கி விரைவில் இங்கே வலையேற்றுகிறேன்).

பிறகு மொழி மேம்பாடு குறித்த செயல்பாடுகளுக்கான பொதுவான அமைப்புரீதியிலான தேவைகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இன்னும் குறிப்பாக ஏதேனும் ஒரு செயல்பாட்டை

மையமாக வைத்து அமைப்பாக திரள்வது குறித்து பேசினோம்.

நீண்டகாலமாக என் மனதில் இருந்த ஒரு ஆசையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அப்போது உருவானது. அதாவது விக்கிபீடியா போன்ற உலகளாவிய முயற்சிகளில் தமிழின் பங்கு கூடுதலாக

இருக்கவேண்டும் என்பது குறித்து பல காலமாக சிந்தித்து உண்டு. தமிழ் இணைய மாநாடுகளில் இது குறித்து பேசியிருக்கிறேன். கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும்

இது குறித்து நிறைய பேசியிருந்தேன். அண்மைக்காலமாக, மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்கத் தளங்களில்,  பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine Translation), அகராதியாக்கம் போன்ற

செயல்பாடுகளில் தமிழில் கணிவழி பகுப்பாய்வுக்கு ஏற்ற நிலையில் நிறைய உரைத்தொகுப்புகள் (corpus) இல்லை என்பது குறித்து அந்த துறையில் இயங்கும் நிபுணர்களின் ஏக்கத்தை

பகிர்ந்துகொள்ளவேண்டிவந்தது. அரசும் பல்கலைக்கழகங்களும் உரிய அளவுக்கு தங்கள் கடமைகளை ஆற்றாதபோது, ஆர்வமுள்ள தனிநபர்களின் மீதுதான் பொறுப்பு விழுகிறது.

புராஜெக்ட் கூடன்பர்க், விக்கிபீடியா, விக்ஷனரி, வேர்ட்நெட் போன்ற உலகளாவிய முயற்சிகளினூடாக, அவற்றில் தமிழையும் இடம் பெறச்செய்வதன் மூலம், இவற்றை சாதிக்க முடியும் என்பது ஒரு வியூகம். ஆனால் இதைச் செய்வதற்கு பல தரப்பு ஒத்துழைப்பு வேண்டும். தனியாக ஒரு ஆளோ ஒரு நிறுவனமோ மட்டும் செய்கிற வேலை இல்லை இது. இந்த சிந்தனையிலிருந்து பிறந்தது தான் விக்கிபீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகரிப்பதற்கான ஆசை. இப்போது அதில் 10,000 க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் இருக்கின்றன. (அவற்றை முதலில் அதில் வெளியிட்டவர்களுக்கு முதற்கண் எமது நன்றிகள்).

ஆனால், செம்மொழித்தமிழுக்கு இந்த பத்தாயிரம் பத்தாது. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது தமிழில் வேண்டும். இந்த விருப்பத்தை ஒரு தி்ட்டமாக்கமுடியுமா என்று சந்திப்புக்கு வந்த நண்பர்களிடம் கேட்டபோது, உடனடியாக எல்லோராலும் அது வரவேற்கப்பட்டது. சில நிமிடங்களில் அதற்கான ஆதரவு அமைப்பாக வடிவம் கொண்டது. மா சிவக்குமார், ஜெயகிருஷ்ணன், தனபால், சந்திரன் உள்ளிட்ட அனைவரும் சில பூர்வாங்கப் பொறுப்புகளை ஏற்க முன்வந்தார்கள்.

தற்போதைக்கு ‘வலைக்களஞ்சியம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை அரசு, தனியார் உதவிகளுடன் இதை வெற்றிபெறச்செய்ய, ஒரு அமைப்பை உருவாக்க, நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து மார்ச் முதல்வாரத்தில் கூடிப் பேசலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் மட்டுமா? நீங்களும் தான். மா சிவகுமார் ஓரிரு நாளில் ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஆர்வமுள்ள அனைவரையும் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், விஷயஞானிகள் மட்டுமல்லாமல், பெருவாரியாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் நிபுணர்களும் பங்குபெற்றால் இந்த கனவு நனவாகும். எளிதில் உற்சாகம் தொற்றிக்கொள்கிற இலக்கு அல்லவா இது?

நிதி, தொழில்நுட்பம், உள்ளடக்கம், விளம்பரம், ஆதரவு என பல தளங்களிலிருந்து அதற்கு ஆதரவு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆயிரம் நாளில் லட்சம் கட்டுரைகள்! இலக்கு ஓர் இலக்கம் அல்லது லட்சம் கட்டுரைகளே லட்சியம் அல்லது ஆயிரம் நாளில் நூறாயிரம் உரைகள் என்பது போன்ற முழக்கத்தோடு அந்த முயற்சி தொடரும்.

இது குறித்து மேலும் விவரங்களை எதிர்பாருங்கள்.

உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்க்கிறோம். வழிநடத்தும் விழிகளையும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறாக, ஒரு வகையில், அந்தச் சந்திப்பு வெற்றிகரமான ஒன்றாகவே மாறியிருக்கிறது….

 அடுத்த ஆண்டு தாய்மொழி நாளை பெரிய அளவில் கொண்டாடமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.

Advertisements

Comments (19)

தமிழ்க்கொடி 2006 – ஆண்டுத்தொகுப்பு

January 8, 2007
தமிழ்க்கொடி 2006
 
தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு.

இந்த தொகுப்பு இப்போது சென்னைப் புத்தகக்காட்சியில் காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், புன்னகை, சிலிக்குயில், ஞானபாநு, வம்சி புக்ஸ், சாஃப்ட்வியூ போன்ற ஸ்டால்களில் கிடைக்கிறது.

 தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா,  பிரான்ஸ்,  சுவிஸ்,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,  மலேசியா,  வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில், 2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபலிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுருக்கின்றன.

இந்த தொகுப்பு பற்றிய விவாதங்களுக்காகவும் பின்னூட்டங்களுக்காகவும் tamilkodi2006.wordpress.com என்ற வலைப்பதிவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலை நீங்கள் வாங்கிப் படித்த பிறகு அதில் உங்கள் பின்னூட்டங்களை அளியுங்கள்.  நூலை வாங்க, எனக்கு மடலிடுங்கள் (zsenthil@gmail.com).

இந்த ஆண்டுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவை:

சிறப்புக்கட்டுரைகள்
 01. அ. மார்க்ஸ்
  வெற்றிபெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும்

 02. வ.கீதா
  தமிழ்ச்சூழலில் அறிவியக்கம்

 03. பா.ரா.சுப்பிரமணியன்
  சொற்களஞ்சியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்
 
நேர்காணல்
 04. பாமா
  மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கிறது

 05. சுப.வீரபாண்டியன்
  திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம் ஆபத்தானது

 06. ரவிக்குமார்
  தலித் அரசியல்: போராட்ட அரசியலிலிருந்து  ஆக்கபூர்வ அரசியலுக்கு
 
 07. காஞ்சனா தாமோதரன்
  நம்மை வளர்த்த சமூகங்களுக்குத்
  திரும்பிச் செய்ய வேண்டும்

தமிழ்கூறும் நல்லுலகு
 
 08. கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)
  எட்டுத்திக்கும் மதயானைகள்
 
 09. ஜமாலன் (வளைகுடா நாடுகள்)
  பணம் தேடிச்செல்லும் பாய்மரங்கள்
 
 10. லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
  தமிழ் அவுஸ்திரேலியர்கள் இன்று
 
 11. மணி மு.மணிவண்ணன் (அமெரிக்கா)
  தமிழ் அமெரிக்கர்கள் வாழ்வில் திருப்புமுனை?
 
 12. றஞ்சி (சுவிஸ்)
  பெயர்ந்த புலத்திலும் பெண்கள்
 
 13. ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
  சிக்கல் இல்லாமல் தொடரும் வாழ்க்கை
 
 14. ரெ.கார்த்திகேசு (மலேசியா)
  தோட்டம் விட்டு
 
 15. வ.ந.கிரிதரன் (கனடா)
  மெதுவான முன்னேற்றம்
 
 16. துரைமடன் (ஈழம்)
  அரசியல் திசைப்போக்கும் அடையாள எழுச்சியும்
 
அரசியல் – சமூகம்

 17. புனித பாண்டியன்
  தமிழர் மலத்தை தமிழர் அள்ளும் அரசியல்

 18. ஞாநி
  தமிழக அரசியல்: யாருக்கு ஏற்றம்? யாருக்கு இறக்கம்?

 19. ச.தமிழ்ச்செல்வன்
  எதிர்மறைச் சமூகம்

 20. ப.சு. அஜிதா
  பெண்கள் குறித்த சட்டங்களும், தீர்ப்புகளும்

 21. பாரதிபாலன்
  தரமான கல்வியைத் தேடி

 22. செ.ச.செந்தில்நாதன்
  உலகமயமாதல் எனக்கு, உலகபயமாதல் உனக்கு…

 23. சுசி திருஞானம்
  தலைமை தாங்கட்டும் தமிழகம்

இலக்கியம்
 24. ஸ்ரீநேசன்
  கவித்துவத்தின் எல்லை

 25. ஜீ.முருகன்
  வரிகளும் வார்த்தைகளும்…

 26. எம்.கோபாலகிருஷ்ணன்
  நாவல் என்னும் பெருவழிப்பாதை

 27. பாவண்ணன்
  தொடரும் பயணத்தின் இடையில்

 28. அரவிந்தன்
  சலனங்களும் சவால்களும்

 29. அழகிய பெரியவன்
  தலித் உரைநடை

 30. அ.சதீஷ்
  காலம் கண்ணாடி முன் நிர்வாணமாய் நிற்கிறது

 31. ஆ.தனஞ்செயன்
  தனித்துவமான கல்விப்புலச்சிறப்புடன்

 32. லதா ராமகிருஷ்ணன்
  கவிதைசார் போக்குகள்
கலை
 33. சி.மோகன்
  சலனங்களும் சஞ்சாரங்களும்

 34. சி.அண்ணாமலை
  சுழல்வெளி
 
 35. க்ருஷாங்கினி
  முற்றிலுமான புதுமை சாத்தியமா?

ஊடகம்
 36. அ.ராமசாமி
  சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

 37. செழியன்
  நமது தமிழ்ப்படம்

 38. தங்க. ஜெய்சக்திவேல்
  அலைகள் ஓய்வதில்லை

 39. மா. சிவக்குமார்
  வலைத்தமிழின் அடுத்த வீச்சு

 40. நிழல் ப.திருநாவுக்கரசு
  கைப்பிடிக்குள் கனவு

Comments (2)

தமிழாக்கம் 2006: கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும்

தமிழாக்கம் 2006

Thamizhaakkam 2006  தொழில்முறை மொழிபெயர்ப்பு:

நுட்பங்களும் வேலைவாய்ப்புகளும் 

குளோபலிங்கோ மற்றும் ஆழி பதிப்பகம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும் அக்டோபர் 28 – நவம்பர். 4, 2006சென்னை 

தமிழாக்கம் 2006 க்கு வருக! 

இந்தியாவின் முன்னணி மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபலிங்கோவும் அதன் தோழமை நிறுவனமான ஆழி பதிப்பகமும் தொழில்முறை மொழிபெயர்ப்பு குறித்த மேற்கண்ட கருத்தரங்கையும் பயிற்சிப் பட்டறையையும் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்குமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.  

செ.ச.செந்தில்நாதன்குளோபலிங்கோ/ஆழி பதிப்பகம்   
கருத்தரங்கு: தொழில்முறை மொழிபெயர்ப்பு: அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் 

நிகழிடம்: DBICA, Don Bosco Institute of Communication Arts, The Citadel, 45, Landons Road, (Around Tailers Road), Near Ega Theatre, Chennai 10. அரும்பு பத்திரிகை அலுவலக வளாகம். தேதி: அக் 28 & 29: நிகழ்ச்சிநிரல் அக் 28: 

10.00 காலை: தொடக்கவிழா·          திரு. கதிர், பொறுப்பாசிரியர், தினகரன் நாளிதழ்·          திரு. ஆனந்த நடராஜன், அசோசியேட் எடிட்டர், இந்தியா டுடே·          திரு. ஆர். வெங்கடேஷ், துணைத்தலைவர், உள்ளடக்கம், ஆனந்தவிகடன்            11.15 காலை: அமர்வு 1: தொழில்முறை அணுகுமுறை ஏன்?·          திரு. ஏ.ஜே.பாலசுப்ரமணியம், பொது மேலாளர், மனிதவள மேம்பாடு, காவேரி இன்ஃபோஸிஸ், சென்னை·          பேரா. ஆ.இரா. வெங்கடாசலபதி, பதிப்பியல் ஆய்வாளர், எம்ஐடிஎஸ், சென்னை·          திரு. செ.ச.செந்தில்நாதன், சி.இ.ஓ., குளோபலிங்கோ, பதிப்பாளர், ஆழி            2.00  மாலை: அமர்வு  2: மீடியாவுக்கான மொழிபெயர்ப்பு·          திரு. சுசி. திருஞானம், தொலைக்காட்சி நிபுணர்·          திரு. சுகதேவ், பத்திரிகையாளர்·          திரு. சுரேஷ் பால், விரிவுரையாளர், விஸ்காம், லயோலா. 4.30  மாலை : அமர்வு 3: மொழிபெயர்ப்பு அணுகுமுறைகள்·          திரு. பி. தனபால், சி.இ.ஓ. மின்வெளி, திரைப்படவியலர்.·          திரு. மு. சிவலிங்கம், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர். அக் 29: 10.00 காலை: அமர்வு 5: துறைசார் மொழிபெயர்ப்பு  ·          திரு. மு. சிவலிங்கம், தகவல் தொழில்நுட்ப எழுத்தாளர்·          திரு. சந்திரன், வர்த்தக இதழியலாளர்·          திரு. மா. சிவக்குமார், லீனக்ஸ் மொழிபெயர்ப்பு நிபுணர்            11.00 காலை: அமர்வு 6: இலக்கிய மொழிபெயர்ப்பு·          திருமதி அமரந்த்தா, இலக்கிய மொழிபெயர்ப்பாளர்·          திரு. அரவிந்தன், எழுத்தாளர், பொறுப்பாசிரியர், காலச்சுவடு·          திரு. சா.தேவதாஸ், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்            12.00 நண்பகல்: அமர்வு 6: மொழிபெயர்ப்பாளர்களுக்கான கணிப்பொறி, இணைய திறன்கள்            திரு. ஆர்.சிவராஜா, வின்வேஸ் சிஸ்டம்ஸ், மதுரை            திரு. மா. ஆண்டோபீட்டர், சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், சென்னை 

பயிற்சிப்பட்டறை நிகழிடம்:  GlobaLINGO, 12, First Main Road, United India Colony, Kodambakkam, Chennai 24 (Near Liberty Theatre) அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை 

சிறப்பு உரைகள்: (காலை 9.30   10.30) ·          அக் 30 31: சந்திரன்பிஸினஸ் மற்றும் நிதி செய்திகளை புரிந்துகொள்ளுதலும் மொழிபெயர்த்தலும்·          நவ 1: பேரா.பெருமாள் முருகன், எழுத்தாளர், நவீன தமிழ் நடை·          நவ.2 தி.சு.சதாசிவம், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் குறித்து ·          நவ 3 அரவிந்தன், காலச்சுவடு, ஆங்கில idioms and phrases ஐ மொழிபெயர்த்தல்·          நவ 4: மு.சிவலிங்கம், தகவல் தொழில்நுட்ப சொல்லாக்கமும் நடையும் பொது பயிற்சி: (செ.ச.செந்தில்நாதன்)தினசரி·          காலை 10.30 11.30:  மொழிபெயர்ப்பு மேலாண்மை, வழிமுறைகள்·          காலை 11.45 – 12.50:  மொழிபெயர்ப்பு பார்வையில் ஆங்கில, தமிழ் இலக்கணங்கள்·          மாலை 2.30-4.30:  செய்தி மொழிபெயர்ப்புப் பயிற்சி.·          மாலை 4.45-7.30: கணிப்பொறி பயிற்சி – யூனிகோடு, மொழிபெயர்ப்பு நினைவு, எடிட்டிங்             

பதிவு செய்ய:             கருத்தரங்குக்கு:·          பதிவு இலவசம். தொடர்புக்கு:  994014743 அல்லது zsenthil@gmail.com. அனுமதி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில்.             பட்டறைக்கு:             ·          பதிவு கட்டணம் ரூ.2000  (மாணவர்களுக்கு 15 சதம் கழிவு)·          பயிற்சிச்சுவடிகள், நண்பகல் உணவு, மென்பொருள் சிடி இதில் அடக்கம்.·          பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வோர்க்கு ரூ.5000 மதிப்புள்ள மொழிபெயர்ப்பு பணிப்பீடு உத்தரவாதம்.·          குளோபலிங்கோ, ஆழி பதிப்பக திட்டப்பணிகளில் தொடர்ந்து பணியாற்றலாம்.           

முகவரி GlobaLINGO12, First
Main Road,
United
India Colony,
Kodambakkam,Chennai600024
Mobile: 9940147473
globalingo@gmail.com 
Contact Person: S. Senthil Nathan 

Leave a Comment

அ-யூனிகோடு

அண்மையில் தமிழ் நாட்டில் உள்ள கணித்தமிழ் அன்பர்கள் சென்னையில் புதிய தமிழ் 16 பிட் எழுத்துரு அமைப்பு ஒன்றை தற்போதுள்ள யூனிகோடு 16 பிட் எழுத்துருவுக்கு மாற்றாக உருவாக்கினார்கள். டேன் என்று அழைக்கப்படும் Tamil New Encoding அந்த புதிய எழுத்துரு முறை விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இதென்ன புதுப்பிரச்னை, இந்த என்கோடிங் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா என்று அலறுபவர்கள்தான் அதிகம் என்றாலும்,கணி்த்தமிழர்கள் மீண்டும் பிளவுண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம்.

கடந்த ஞாயிறன்று இது குறித்து ஒரு நிகழ்வுக்கு தமிழ் இணைய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

என்கோடிங், யூனிகோடு, பிட் போன்றவற்றைப் பற்றி வகுப்பெடுக்க இந்த வலைப்பதிவில் இப்போது நேரமில்லை. ஆனால், உங்களில் பலருக்கும் அது தெரி்ந்த கதையாக இருக்கும்

என்பதால் அதைப்பற்றி நேரடியாக கொஞ்சம் பார்ப்போம்.

முன்கதைச் சுருக்கம்: முன்னொரு காலத்தில் இந்திய அரசின் மின்னணுவியல் துறை இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக ISCII எனப்படும் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையை உருவாக்கியது. பின்னொரு காலத்தில், உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்குமான எழுத்துக்குறியீட்டு தரப்பாடாக யூனிகோடு உருவானபோது, அந்த அமைப்பி்ன் நெறிமுறைப்படி நாடுகள் ஒவ்வொன்றும் அளித்த தரப்பாட்டின் அடிப்படையில் அது உருவானது. அங்கே தான் சிக்கல், இந்தியாவில்.

புதிய 16 பிட்காரர்களின் வாதம்:

இந்தி மொழியின் வரிவடிவமான தேவநாகரியை அடிப்படையாகக் கொண்டு அந்த இஸ்க்கீ வடிவமைக்கப்பட்டது. அந்த அமைப்பு தமிழுக்கும் வேறு சில இந்திய மொழிகளுக்கும் சரிவர பொருந்தவில்லை. எடுத்துக்காட்டாக, யூனிகோடு தமிழ் அகரமேறிய மெய்யெழுத்துகளை – க, ங, ச, – அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், முறைப்படி க், ங், ச்,.. என்றுதான் வரவேண்டும். சாதாரணமாக இது ஒரு பிரச்னை இல்லை என்று தோன்றும். புள்ளி டைப் பண்ணிகிட்டா போச்சு என்று விடமுடியாத பிரச்னை இது. ஆனால் தமிழ் இலக்கணப்படி உருவாக்கப்படும் இயல்மொழி நிகழ்முறை (natural language processing) செயல்பாடுகளின் போது இது பிரச்னை அளிக்கிறது. நாம் ஏன் தமிழின் இயல்பான இலக்கண அம்சத்தை இழக்கவேண்டும்?

எழுத்துக்களின் வரிசைப் படுத்தம் சரியில்லை. யூனிகோடு தமிழ் அட்டவணையில் ‘ச’-வுக்கு அடுத்து ஜ வருகிறது. இதுவும் தேவநாகரி வரிவடிவத்தின் வரிசையை தமிழ் மீது ஏற்றியதன் விளைவு. இது எல்லாவற்றையும் விட பிரச்னை தமிழ் ஆய்த எழுத்தை தேவநாகரி விஸர்காவுக்கு நிகராக நினைத்து சேர்க்கப்பட்டிருப்பதால் பிரச்னை எழுந்திருக்கிறது.

பிரபலமான யூனிகோடு எழுத்துருவான லதாவில் தமிழை உள்ளிடும் போது ஃ – ஐ டைப் செய்யும்போது  அதற்கு முன் புள்ளிவட்டம் வருகிறதே, பார்த்திருப்பீர்கள். அது இந்த பிரச்னைதான். வேறு ஒரு எழுத்துக்குப்பின்னால் என்றால், அந்த டாட்வட்டம் வராது.இது ஒரு எழுத்துரு வடிவமைப்பு பிரச்னைதான் என்றாலும், அந்த பிரச்னைக்கு காரணமே தேவநாகரி வரிவடிவத்தின் கீழ் இந்திய மொழிகள் அனைத்தையும் கொண்டுவந்ததுதான்.

இந்திய மொழிகளின் வரிவடிவங்களில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. தமிழ்,குருமுகி (பஞ்சாபி) போன்ற வரிவடிவங்களில் இந்தி, வங்காள மொழிகள் போல மெய் கூட்டெழுத்துக்களே (அதாவது, க்க, ங்க, க்‍ஷ போன்றவற்றை தமிழில் தனித்தனி எழுத்துருவாக எழுதுவோம், இந்தியில் என்றால் क्क,क्ष என பாதியெழுத்துக்கூட்டு, முற்றிலும் வேறு எழுத்து கூடடெழுத்தாக வருவதெல்லாம் உண்டு. தமிழில் அப்படி கிடையாது. பிறகு எப்படி இரு தரப்புக்கும் பொதுவான திட்டம் வகுக்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக தற்போதைய யூனிகோடு தரப்பாட்டில் ஒரு பிரச்னை இருக்கிறது.ரோமன், சிரிலிக் போன்ற குறைந்த எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் மட்டுமல்ல, சீனம், கொரியன் போன்ற ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட மொழிகளுக்கும் கூட ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு என்று நேரடியாக பொருந்துகிற வகையில் யூனிகோடில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்திய மொழிகளுக்கோ உயிரெழுத்து, உயிர்க்குறியீடுகள், மெய்யெழுத்து மற்றும் சிறப்புக்குறியீடுகளுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளன. உயிர்மெய்யெழுத்து, மெய்-மெய் கூட்டெழுத்து போன்றவற்றுக்கு யூனிகோடில் நேரடியாக இடமில்லை. உதாரணமாக, தமிழுக்கு எடுத்துக்கொண்டால், உயிர் 12, மெய் 18, இதனுடன் கிரந்த எழுத்துகள், ஆய்தம், ஸ்ரீ போன்ற சிறப்பெழுத்துகள் இடம் பெறுகின்றன. கா, கீ, கூ போன்ற உயிர்மெய் எழுத்துகளுக்கு நேரடியாக இடமில்லை. எனவே ஒவ்வொரு கணிப்பொறியிலும் அல்லது மொபைல் போன்ற சாதனங்களிலும் இந்த உயிர்மெய் எழுத்துத் தோன்ற, சிறப்பாக சில மென்பொருள்கள் சேர்க்கப்படவேண்டியிருக்கிறது. உங்கள் இணைய உலாவியில் ரெண்டரிங் எஞ்சி்ன் என்று ஒரு குட்டி மென்பொருள் இடம் பெற்றிருந்தால்தான் நீங்கள் இந்த வலைப்பதிவையே கூட சரியாக படிக்கமுடியும். இல்லையென்றால், க‍ோ, த‍‍ௌ, ப‍ு என்பது போல பார்ப்பீர்கள்.

இப்போது கணி்த்தமிழ் செயல்பாட்டாளர்கள் மேற்கண்ட காரணங்களால் தற்போதுள்ள யூனிகோடு தமிழ் அட்டவணையைத் தவிர்த்து, புதிய தமிழ் அட்டவணை ஒன்றை உருவாக்கி அதை தரப்படுத்தப்பட்ட 16 பிட் வடிவமாக ஆக்குமாறு கேட்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் எழுத்துருவுக்கும் நேரடியாக ஒரு குறியீடு ஒதுக்கவேண்டும். அதுதான் கோரிக்கை.

ஆனால், யூனிகோடு தரப்படுத்த அமைப்பான யூனிகோடு கன்ஸார்ஷியம் இதை ஏற்க மறுக்கிறது. இந்திய மொழிகள் அனைத்துக்கும் உயிர், மெய், உயிர்க்குறியீடு ஆகியவை மட்டுமே அடிப்படை என்றும் உயிர்மெய் எழுத்துகள் மற்றும் கூட்டெழுத்துகள் ஆகியவை டிரைவேட்டிவ்கள்தான் என்பதால் அவற்றுக்கு தனித்தனி இடம் தரவேண்டியதில்லை என்றும் கூறுகிறது.

இந்தியாவின் மற்ற மொழிகளில் அதன் கூற்று சரியாகத்தான் பொருந்துகிறது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த, பிரபல இநதிய மொழிகள் எழுத்துரு நிறுவனமான மாடுலர் இன்ஃபோடெக்கின் (ஸ்ரீலிபி மென்பொருள் உருவாக்கியவர்கள்) தலைவர் எம் என் கூப்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இதெல்லாம் தமிழுக்கு பொருந்தலாம், இந்திக்கு பொருந்தாது என்றார். பெருக்கல் கணக்குப்போட்டுப்பார்த்தால் இந்தியில் 5000 கூட்டு வடிவங்கள் வருகி்ன்றனவாம். தமிழுக்கு வெறும் 300க்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. எனக்குத் தெரிந்தவரை வங்க மொழியில் இந்த எண்ணிக்கை இன்னும் பல ஆயிரம் கூடும். ஜாங்கிரிஸ்கிரிப்ட் லிபிகளான தெலுங்கு, கன்னடத்திலும், தமிழுஞ்சமற்கிருதமுங்கலந்த மலையாளத்திலும் நிறைய கூட்டக்ஷரங்கள் இருக்கலாம்.

இதெல்லாம் புதியன தேடுவோர் வாதம்.

பழைய 16 பிட் யூனிகோடு ஆதரவாளர்கள் சொல்வது:

டேன்காரர்களின் வாதங்களை யூனிகோடு ஏற்காது. அடிப்படை எழுத்துக்களுக்கு உள்ள இடமே போதும். இல்லையென்றால், இந்திய மொழிகள் அனைத்திலும் இது புதிய பூகம்பமாக மாறும். அதுமட்டுமல்லமால் 2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய யூனிகோடு அடிப்படையில் நிறைய மென்பொருள்கள் உருவாகிவிட்டன. ஆபரேட்டிங் சிஸ்டம் உதவி உருவாகியிருக்கிறது. இப்போது மீண்டும்போய் இதெல்லாம் மாற்றமுடியாது.அது மட்டுமல்லாமல், புதிய டேன் எழுத்துரு தொகுப்பை யூனிகோடின் தனியார் பிராந்தியத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இது தீர்வு அல்ல. எல்லாம் சரி. தொண்ணூறுகளில் இஸ்க்கீ உருவான போதே இந்த பிரச்னைகளை இனம்கண்டு தீர்வு சண்டை போட்டிருக்கவேண்டும்.
பழைய யூனிகோடின் ஆதரவாளர்களை status quoists என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், தற்போதைய முறையில் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து மென்பொருள் தீர்வுகளை உருவாக்கியிருக்கின்றன. நோகியா செல்பேசியில் உள்ள தமிழும் யூனிகோடு அடிப்படையிலானது.

அப்புறம் இந்திய வரிவடிவங்களில் தமிழும் ஒன்று இல்லை என்பது போல பேசக்கூடாது. அது இந்திய மொழிகளுக்காக கணிப்பொறி நிறுவனங்கள் அளிக்கும் தீர்வுகளையும் தமிழுக்கு நிறைய மென்பொருள்கள் உருவாகும் வாய்ப்பையும் பறிக்கும்.

இப்போது இருப்பதில் எந்த பெரிய பிரச்னையும் இல்லை.

நம்ம கருத்து:

தமிழுக்கு நீதி கிடைப்பது X இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது என்ற இரண்டு எதிர்வுகளில் சிக்கி்க்கொண்டிருக்கிறது இந்த பிரச்னை. தொடக்கத்திலேயே நம்மவர்கள் விழித்திருந்தால் தமிழ் வழமையான இண்டிக் ஸ்கிரி்ப்ட் இல்லை, வித்தியாசமானது என்று சொல்லி தேவையானதை வாங்கியிருக்கலாம்.

வெறும் எழுத்துரு, டிடிபி என்று பார்க்காமல், கணித்தமிழ் வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் தற்போதுள்ள யூனிகோடு பித்தளையாக இளித்துவிடும் என்கிற குற்றச்சாட்டு உண்மையாக ஆகலாம்.

உண்மையிலேயே, இது தர்மசங்கடமான நிலை. ஆனால், இந்த பிரச்னையை தற்போது ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் விவாதி்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் இணைய மாநாடுகளும் ஏற்கனவே ரொம்ப அரசியல்மயமாகிக் கிடப்பதால், நாம் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டேயிருப்போம் என்றுதான் தெரிகிறது.

வலைப்பதிவர்களே, இது குறித்து ஏதாவது செய்தாகவேண்டும். கூட வறீங்களா?

வால்: ஞாயிறன்று நடந்த இந்த கூட்டம் சுவாரசியமாகத்தான் இருந்தது. சண்டையை சீ்க்கிரம் முடித்துக்கொண்டு முடிவுக்கு வாருங்கள் என்று பேராசைப்பட்டார் மத்திய தகவல்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன்.

இது போன்ற விவாதங்கள் எல்லாம் இந்தியில் நடக்கவில்லையா என்று கேட்டதற்கு,நீங்கள் எல்லாம் அதி்ர்ஷ்டசாலிகள் என்றார் மாடுலர் இன்ஃபோடெக் கூப்பர். You own your script. Nobody owns Devanagari script. Neither UPwaalaas, nor Rajasthanis, nor Biharis, nor Maharastrians, nor…

கூப்பர் ஐயா, நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி.

Comments (23)

Hello world – ஏழெட்டு தமிழ் மொழிபெயர்ப்புகள்

Hello world என்கிற இந்த கம்ப்யூட்டர் யுக பிள்ளையார் சுழியை எப்படி தமிழ்ப்படுத்தலாம் என்று பார்த்தால், ஹலோ உலகமே என்று ஒத்தைக்கு ஒத்தை மாற்றினால் தொடக்கமே கடுப்பாகிவிடுகிறது. ஆகையில், அக்கம் பக்கத்தில் சிலரைக் கேட்கலாம் என்று யோசிக்கிறேன். முன்னதாக சில அனுமானங்கள்.

  • அரசியல்வாதி அத்திப்பட்டியார் மொழிபெயர்த்தால் – பெரியோர்களே, தாய்மார்களே
  • பேட்டை பெரிசு மொளிபெயர்த்தது – இன்னா நைனா பூலாமா
  • என் தூரத்து தாத்தாவின் மொழியாக்கம் – திருச்சிற்றம்பலம் (எதற்கெடுத்தாலம் இவர் தொடக்கத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார். இவர் அரசாங்கத்தை ஏமாற்றி 65 வயது வரை ஆசிரியர் பணியில் இருந்ததால் மக்கள் இவரை திருட்டுச்சம்பளம் என்றே கூப்பிடுவார்கள்).
  • கவிஞர் ப்ரியபாரதி324 மொழிமாற்றியது – ஹே! லோகசஹியே!
  • கவியரசர் திரைப்பாடியின் மொழிபெயர்ச்சி – அன்பே, அகிலமே (அ) உலகே உன்னை அழைககிறேன்.
  • தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளர் தமிழ்வளவேங்கையின் மொழிபெயர்ப்பு – ஏலா, உலகம்! (ஹலோ என்ற ஆங்கிலச்சொல் ஏலா என்ற தமிழ்ச்சொல்லின்கண் பிறந்தது. உலகம் என்ற சொல் லோகம் என்ற வடமொழியின் தமிழ் வடிவமாயினும் அஃது உலை+அகம் என்ற சொற்களின் மரூஉ ஆகும். எவ்வாறு உலையினின்று பிற பொருள்கள் தோற்றுவிக்கப்படுவோ, அது போல இஃது தொல் உலையாகும். இவ்வகத்தினின்றே பிற உயிரிகள் தோன்றின என்மனார் புலவர்).
  • கணித்தமிழ் நண்பர் கரிகாலன் மொழிமாற்றம்: ஹலோ வேர்ல்டு

இப்படித்தான் நடக்கும் என்ற அனுமானத்தில் இருக்கிறேன். உங்கள் அனுமானங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருககும்?

எனது இணையாக்கம்  இது – ஹலோ, அமெரிக்கா!
 

Comments (8)