Archive for தமிழ்நாடு பொருளாதார

மதுரையில் BPO

மதுரையில் நேற்று (மார்ச் 2 2007), மதுரை சிறு மற்றும் குறு தொழில்நிறுவனங்கள் கூட்டமைப்பு (மடீட்ஸியா) சார்பில் நடந்த, பிஸினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் தொடர்பான, Setting up and Scope of BPO in Madurai என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். இந்த துறையில் தற்போதைய போக்குகளும் வாய்ப்புகளும் என்ன என்பது குறித்தும் மதுரை அதைப் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறித்தும் நான் பேசினேன். தொழில்வணிக நிகழ்முறை அயலாக்கம் (Business Process Outsourcing க்கு தமிழ். எப்படிங்க இருக்கு?) என்பது இனி எதிர்த்திருப்ப முடியாத ஒரு தொழில் நிகழ்முறையாக மாறிவிட்டது. அந்த துறையில் இந்தியா முன்னோடி என்பதால், தேவை கருதி,  இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் இப்போது அது விரிவடையத் தொடங்கியுள்ளது. இது அந்தந்த நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு மூக்கு வேர்க்கவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் அதைப் பார்க்க முடிந்தது. கலந்துகொண்ட 150 க்கும் மேற்பட்ட பேர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழில்முனைவோர் அல்லது தொழிலதிபர்கள். 40 வயக்குக்கும் மேற்பட்டவர்கள் பலர். சின்னப்பயல்களெல்லாம் 20, 30 ஆயிரம் என்று சம்பாதிக்கும்போது, நாங்களெல்லாம் என்ன செய்வது, பி.ப்பி.ஓ.வில் எங்களுக்கெல்லாம் தொழில்வாய்ப்பு இருக்குமா என்ற கவலையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். சென்னையிலோ பிற பெருநகரங்களிலோ பார்க்கமுடியாத ஒரு போக்கை அங்கே பார்க்கமுடிந்தது. ஒரு குறிப்பிட்ட துறையில் எப்படி அந்நிய நிறுவனங்களை நாம் ஈர்ப்பது என்று பெருநகரங்களில் பேசும் அதே வேளை, இந்த துறையில் உள்ளூர் தொழில்முனைவோர்கள் எப்படி பலன்பெறமுடியும் என்று மதுரைவாசிகள் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு புதிய துறை கால்கொள்ளும் போது, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு மிக்ஸாக இருந்தால்தான் பிஸினஸ் பண்ணமுடியும் என்பது என் கருத்து. பெங்களூரில் தொழில்நுட்பம் சார்ந்த பி.ப்பி.ஓ, சென்னையில் நிதி/வங்கி சார்ந்த பி.ப்பி.ஓ, தில்லியில் அழைப்பகங்கள் என ஒவ்வொரு மாநகரமும் பொதுவான அயலாக்க நிறுவனங்களோடு பிரத்யேகமான அயலாக்க நிறுவனங்களை கூடுதலாகப் பெற்றுள்ளன. அந்த நகரங்கள் பின்பு அவ்வாறாக பிராண்ட் செய்யப்படுவதும் அதன் மூலமாக அதே துறையில் கூடுதல் முதலீடுகளை அவை கவர்வதும் இதனால் சாத்தியமாகியிருக்கிறது.  

இதைப் போல மதுரைக்கென்று ஒரு பிரத்யேக துறையை கருதமுடியுமா என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதற்கு உடனடியாக பதில் பெற முடியவில்லை, பெறுவது சாத்தியமில்லை என்றாலும் அது பரவலாக சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. உணவு இடைவேளையில் பலர் அது குறித்து உரையாடினார்கள். மதுரை மக்கள் தங்கள் நகரத்தை மிகவும் நேசிப்பவர்கள்தான் என்றாலும் கூட்டாக மதுரையை பிராண்ட் செய்யக்கூடிய தேவையை எந்த அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தேவையில்லை. முன்னணி தொழிலதிபர்களின் பேச்சுகளில் அது பற்றி எதுவும் புலப்படமாட்டேன் என்கிறது. தனிநபர்வாதம்தான் எந்த பொதுநலனுக்கு எதிரி. கூட்டு சுயநலம் கூட இல்லையென்றால் நம்மை யாரும் காப்பாற்றமுடியாது.  மதுரையில் அயலாக்கத்துறைக்கான ஒரு சூழமைப்பை (Eco-system) உருவாக்குவதற்கு முதலில் கல்வியிலிருந்துத் தொடங்க வேண்டும். ஆனால், ஆங்கிலம் சரியாகத தெரியாததை மட்டுமே ஒரு பெரிய பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆங்கிலப் புலமை சரியாக இல்லாததன் காரணமாக (இதை lack of communication skill என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். மதுரைக்காரய்ங்களுக்கா பேசத் தெரியாது?) பி.ப்பி.ஓ. இங்கே வராது என்று பலர் அங்கலாய்த்தார்கள். பி.ப்பி.ஓ. என்றாலே கால்சென்டர்கள்தான் என்று நினைப்பதும் காரணம். எவ்வளவோ அயலாக்க பிரிவுகளில் ஆங்கிலம் ஒரு பிரச்னையே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் front office மற்றும் project management அணியில் உள்ளவர்கள் மட்டும் நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும், பிறர் சமாளிக்கக்கூடிய அளவுக்கு ஆங்கிலப் பயிற்சி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொழில் செய்யமுடியும்.  இன்னொரு விஷயத்தையும் கவனிக்கமுடிந்தது. என்னிடம் பணம் இருக்கிறது அல்லது நான் பத்து பி.ஸி. வைத்திருக்கிறேன், நான் என்ன பிஸினஸ் பண்ணலாம் என்று கேட்கிறார்கள். ஏதாவது புராஜெக்ட் ரிப்போர்ட் வைத்திருக்கிறீர்களா என்றும் அப்பாவித்தனமாக கேட்கிறார்கள். எந்த துறையில் நீங்கள் அயலாக்கப் பணிகளை வழங்க விரும்புகிறீர்களோ, அந்த துறையில் உங்களுக்கு விவரம் தெரியுமா, ஆழமான அறிவு இருக்கிறதா,  அந்த துறைதெரிந்த விற்பன்னர்களைக் கொண்ட அணியை அமைக்க தயாராக இருக்கிறீர்களா என்பதை விட்டுவிட்டு, வெறுமனே ரெண்டு ஃப்ளோர் காலி இடம் இருக்கிறது, இன்டர்நெட் வசதியோடு சிஸ்டம்ஸ் இருக்கிறது என்று பேசி பிரயோஜனமில்லை. நல்ல வேளையாக, இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு அந்த சேதி வலுவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சிஸ்டத்துக்கு இவ்வளவு பணம் கொடு, ஆர்டர் தருகிறேன் என்று கிளம்பிவிடுகிற போலி பிஸினஸ்காரர்கள் குறித்தும் எங்கிட்ட ரெண்டு மில்லியன் டாலர் மதிப்புகள் யு.எஸ். புராஜெக்ட்கள் இருக்கின்றன, காசு கொடுத்தால் ஆர்டர் தருகிறேன் என்று சொல்லும் இடைத்தரகர்கள் குறித்தும் பேச்சாளர்கள் எச்சரித்தார்கள். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் மடீட்ஸியாவின் ஐடி பிரிவு தலைவர் திரு. அஸ்வின் மேத்தாவும் வின்வேஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆர்.சிவராஜாவும். இது குறித்து இவர்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே ஈ-குரூப் ஒன்றைத் தொடங்கி விவாதத்தைத் தொடங்கியவர்கள். சென்னை டிசிஎஸ்ஸிலிருந்து அதன் துணைத்தலைவர் திரு. வெங்கட்நாராயணன், புது தில்லியிலிருந்து எச்சிஎல் காம்நெட்டிலிருந்து நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் பிரிவின் ஏஜிஎம் திரு. விஷால் பாரபாத்ரே, பெங்களூரிலிருந்து பி.டி.இ. நிறுவனத்தின் திருமதி. சுனிதா, மதுரையிலிருந்து சுஸீ இன்ஃபோசிஸ்டமின் திரு. ராஜீவ், த இந்து பிஸினஸ் நிருபர் டாக்டர் ரங்கராஜன், சிஐஐயின் இந்த பிராந்தியத்தின் ஐடி பிரிவு தலைவர் திரு. ரெட்டி ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். திரு. சிவராஜாவின் நெறிப்பாட்டில் நடந்த விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது. மதுரைத் தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் இந்த நிகழ்வு – அதன் இலக்குகளை எட்டும் போது – முக்கியமானதாகப் பதிவு பெறும்.

Advertisements

Leave a Comment

தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்

தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே தொழில்முனைவோர் என்று நான் சொல்வது தொழில் தொடங்குகிற அத்தனை பேரையும் அல்ல. தொழிலதிபராக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிஸினஸை செய்பவர்களை மட்டுமே. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நேற்றைய/இன்றைய வெற்றிகரமான முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. ஒருவகையில் அதில் சுயநலமும் இருக்கிறது.

நானும் ஒரு முதல் தலைமுறைத் தொழில்முனைவோன்தான். எனது தாத்தா காலம் வரை எங்கள் மூதாதையர்கள் பரம ஏழையான நெசவாளர்கள். எனது அப்பா நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து, வித்துவான் பட்டம் வாங்கி, ஆசிரியாக ஆனவர். அவர் ஓய்வு பெறும்போது தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா அஞ்சாங்கிளாஸ். எனது சொந்தத்தில் யாரும் பிஸினஸ் கிடையாது. தூரத்து சொந்தங்களில் சில வியாபாரிகள் உண்டு.  நான் ஒரு நல்ல டாக்டராகவோ பொறியாளராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆகவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. கொஞ்சகாலம் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் வேலை செய்த நான், பிறகு ‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’, பிஸினஸ் தொடங்கினேன்.  என் வாழ்க்கைத்துணைவியாரின் ஒரே ஆதரவைத் தவிர, எனக்கு வெளிப்படையான, மனப்பூர்வமான ஆதரவு என் சுற்றத்தில் யாருமில்லை. நாற்பது, அம்பதாயிரம் சம்பளம் வாங்க வேண்டிய புள்ளை, பிஸினஸ், அது இதுன்னு வாழ்க்கையை வீணாக்குகிறான் என்கிறார்கள் சிலர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டாமா என்றில்லாமல் இது என்ன வேலை என்கிறார் ஒருவர். டிரைவர்களெல்லாம் பஸ் ஓனர்களாக ஆக முயற்சிக்கக்கூடாது என்கிறார் என் அப்பா. இவ்வளவு வருஷம் ஆச்சு, பிஸினஸ் உனக்கு சரிப்பட்டு வராது, ஒழுங்கா வேலைக்குப் போ என்று அறிவுரைக்கும் நலன்விரும்பிகள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவி்ல் ஒரு பாட்டுக்குள் பணக்காரனாகும் வித்தை எனக்குத் தெரியவில்லை என்பதே ஆதங்கம். இதற்கிடையில் நாலஞ்சு வென்ட்ச்சர்களைத் தொடங்கி, அடிபட்டு, சற்றே தேறி, இப்போது ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஆழி என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன்.

 இன்று வெற்றிகரமாக பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்னை விட நிறைய கஷ்டங்களை அனுபதித்திருக்கிறார்கள்.  நிறைய rags to riches கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான ஒரு வழி தான் புத்தகம் எழுதுவது. இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்.

 ஆனால் இதில் உங்கள் உதவியும் தேவை

– நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

– அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அறிமுகப்படுத்துங்கள்

– நீங்கள் வியந்து போற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் – இன்றைய வெற்றிகரமான தொழிலதிபர்கள் – அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயமி்ல்லை- குறித்து டிப்ஸ் கொடுங்கள். அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடி, வலுவான தகவல் புலத்துடனும் அறிவுச் செல்வத்துடனும் அந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

கை கொடுங்களேன்!

Comments (7)