Archive for சும்மா எதையும் எழுத

சாத்தான் எழுதும் நாவல்

சாத்தான் என்னுடைய நண்பர்.  1995 இலிருந்து அவர் எனக்கு நண்பர்.  அவர் முதலில் ஒரு சீட்டுக்கவியாக இருந்தார். திருவல்லிக்கேணி-மயிலாப்பூர் பஸ் டிக்கெட்டின் பின்பக்கத்தில் வழக்கமாக கண்டக்டர்கள் ஒருபோதும் கொடுக்கப்போகாத சில்லரையை எழுதுவார்கள். சாத்தான் கவிதை எழுதுவார்.

தகவல்நுட்பம், இலக்கியம், கலை, மொழி என பல தலைப்புகளில் எழுதிவருகிற சாத்தானின் வலைப்பதிவை உங்களில் பலருக்கும் தெரியும்.  satanblog.wordpress.com செல்லுங்கள்.

இப்போது அவர் ஒரு நெடுங்கதை எழுதிவருகிறார். திசை காட்டிப் பறவை என்ற தலைப்பிலான குறுமத்தியாயங்கள் நிறைந்த அவரது கதைத்தொடரை நீங்கள் படித்தேயாகவேண்டும்.  இதை நான் ஸ்டாராங்காக ரெமண்ட் செய்வதற்கு காரணம், எனக்குத் தெரிந்தவரை,  சென்ஸிபிளான விஷயங்களை நான்சென்ஸாக எழுதும் எழுத்தாளர்கள் நிறைந்த இந்த நாட்டில்,  சென்ஸிபிளாக நான்சென்ஸ் ரைட்டிங்கில் கலக்கும் எழுத்தாளர் அவர். satanblog.wordpress.com

Advertisements

Comments (3)

புலவன் புலம்பல்

இஃது அஃதன்று, அஃது வேறு.
அஃது உஃதன்று, இஃதுமன்று.
எஃது இஃதென்று அறியாத போது,
சிறுங்காதல் வந்து சிந்தையைக் குடைந்தது.

சிம்ரன், ஜோதிகா வரிசையினள் அவள்.
முகவரி அறியேன். பெயரும் தேடேன்.
கண் பார்த்த விஷயங்கள் போதும்.
பறந்து வந்த காற்றில்
பதிந்து சென்ற கண்ணோட்டம் போதும்

ஒரு செமஸ்டர்காலத்தில் அவளுடைய எதிரியாவது உறுதி.
புலமை படிக்க வந்தோனுக்கு
பொருளியல் மேல் என்ன ஆசை?

யாமோ, காமத்துப்பால் கசடற கற்றோன்.
தலைவியர் மடக்கும் தலைவன். எனினும்
பொருட்பாலள் மயக்கும் வித்தை அறிந்திலேன்.
கெய்னீசியன் கோட்பாடுகளைவிட
பெருமந்த காலத்தின் ஒப்பாரியைவிட
நியூயார்க் முதல் நியூயார்க் வரை
24 மணிநேர ஃபண்ட் மானேஜர்களின் கத்தல்களைவிட
சாலச்சிறந்ததோர் சரக்குண்டு எம்மிடம்.

அவள் வரமாட்டாள்.
யானோரு பி.பீ.ஓ. சரக்கல்லன்.
புங்கமரக்காட்டு கல்லூரியொன்றில்
தமிழ் விரிவுரையாளனாய் நாளை ஒருநாள்
தேமா, புளிமா போதிக்கக் காத்திருக்கும்,
இனிதிது, இன்னாதிதுவென
வறண்ட வகுப்பறையில் வளவளக்க தயாராகும்,
விதியின் கையாள் யான்.
நீர்வழி்ப்படும் புணைபோல்
ஓர் வழிப்பட்டு செல்லும் நாளை எதிர்நோக்கி நிற்போன்.
வாராள் என் தலைவி.

குறுந்தொகை கொண்டோன், சிலேடையில் சிறந்தவன்.
கார்மேகத்தின் அடிப்பொடி, குறவஞ்சியின் ரசிகன்.
ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன்
அவளை அழைப்பேன் சுவர்க்க வாயில்வரை.
கைவல்ய நவநீதம் காட்டி மகிழ்வேன்.

எல்லா சரக்கும் யாமறிவோம் எனினும்
யானோரு ஐ.டி. சரக்கல்லன்.
திருமால் அறிவேன், ஷாப்பிங் மால் அன்று.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிக.
காதல், இயற்கையிலேயே கண்டதும் வருமோ?
பின்புலம், முன்புலம், எதிர்நாள் ஏக்கம்
காத்தலின் நிச்சயம், கடவுச்சீட்டுகள்,
விசா, பிஸ்ஸா, சேஃபர் செக்சுமென
எல்லாம் முகத்தில் பிரதிபலிக்குமோர்
ஸ்டெல்லா மேரிசின் சிகைவண்ணம் மாற்றும்
செவ்விளங் குமரிக்கு?

தீயின் பிழம்பொன்று என்வயிறு புகுந்திட,
இன்று
காரில் வந்த ஓர் கயவன் அவளை
கொத்திச்செல்வதைக் கண்டேன்.
சாலமன் பாப்பையா சரியாய்ச் சொன்னார்:
அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா.

அவற்றாயும் இவற்றாயும் ஒரு கிளப்பின் மாக்கள்.
அந்தையும் இந்தையும் வரிகொடு வரம்பினர்.
ஆதலின்,
செம்புலப் பெயல்நீர் செப்படி வித்தை வேண்டாது,
இன்றைக்கு காலம் இனிதே நிறைய
டேட்டிங், ச்சாட்டிங், ஷாப்பிங், கீப்பிங்…

வாராள் தலைவி, வழிதவறினோளே.
எமக்கு,
எந்தையும் தாயும் தம்கடன் மறவாது,
தட்சணை அளந்து, தடவிப்பார்த்து
கொணர்வர் ஒரு குமரியை நாளை.

அஃது வரை,
எஃதும் நமதன்று, இஃதும் நமதன்றாதலின்,
காயத்ரிகளை வியத்தலும் இலமே.
கண்ணம்மாக்களை இகழ்தல் அதனினும் இலமே.
 
 
 

Comments (6)

ஈ மெயில் குறுங்காவியம்

இது தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிpearlவாள நடையில் எழுதப்பட்டது. ஈ-மெயிலின் மகா மகோன்னதமான பயன்பாடுகள் குறித்து அதன் அருமை அறியாதோர்க்கு தெற்றென விளக்குவான் எழுதப்பெற்றது.

(யாப்பு – ஆசிரியர் வருத்தப்பா)

மஞ்சள்பொட்டு வைத்து மணவிழா அழைப்பிதழை
மங்கலமாய் அனுப்ப வழியற்ற இம்மின்
அஞ்சல்தொட்டு ஆவதென்கொல் எனக்கேட்டாய்.
அடச்சே! டெக்ஸ்ட் பாக்ஸ் பின்புலத்தை மஞ்சள் செய்!
நெஞ்சம் செல்வேகத்தில் மெயில் செல்லும், பெர்சனலாய்
நேருக்கு நேர் பேசல் நிகர்த்த செயல் அன்றோ – உலகக்
கஞ்சர்களின் தவத்தாலே கயிலை சிவன் அருளிய
கில்லர் ஆப் இதுவாம். செலவுக்கு ஸ்டாப் இதுவாம்.

போஸ்ட்மேன் வருகைக்காய் காத்திருந்து பூத்திருந்து
பெற்றக்கடிதத்தை பிரித்து மகிழ்வதும் ஓர்
ஹோஸ்ட் கம்ப்யூட்டர் இணைப்புள்ள ஹோம் பி.சி. இன்பாக்ஸில்
ஓப்பன் செய்வதுவும் ஒன்றா எனக் கேட்பவனே. ம்ஹூம்
வேஸ்ட் நீ! அட்டாச்மென்ட் அட்ரஸ்புக் அறியா அசடன் நீ.
விலைகேட்கா யாஹூ, ஹாட்மெயில் போல் சர்வீஸ் பல இருக்க
காஸ்ட்லி கடிதங்கள், கூரியர்கள் தேடுகிறாய். `கனி யிருப்ப
காய்கவர்ந்த’ குறளுக்கு இலக்கணமோ உன் செய்கை?

செக்ஸ்சைட்கள் புண்ணியத்தால் ஜெகவலை பிரபலமாம்.
ச்சாட் இல்லை என்றால் சைபர்கபேக்களில்லை. அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் ஏறிவரும் எமன்களாய் வைரஸ் தொல்லை –
என்பாய் நீ. எதில் இல்லை பேஜாரு? எக்ஸ்பீரியன் ஸிலாதவனே!
டெக்ஸ்ட் எடிட்டர் திணறுகிற வேகத்தில் சொற்களெல்லாம்
டெலிவரி யாகின்ற மாஜிக்கை உணராமல், புத்தம்புதிய ஈ
புக்ஸ் வந்த காலத்தில் சாணித்தாளில் படிக்கும்
புராதனன் அன்றோ நீ! பூட்ட கேஸ் ஆவாயோ?

சப்ஜெக்ட் லைனிலே தொடங்கிவிடும் சரசங்கள்
ச்சாட்கள் முடிந்துவிடும் முகவரி பரிமாற்றத்தில்
ரிப்ளை செய்பவளின் ரிஷிமூலம் அறிந்திடவும்
ரீல்விடும் ஜொள்ளனின் நதிமூலம் அறிந்திடவும்
அப்ளிகேஷன்கள் உண்டு. அபாயம் ஒன்றுமிலை –
அறுமுகனைப் பெற்றெடுத்த ஆதிசிவன் அருளாலே,
பப்ளிமாஸ் கொத்தவரை பாவையரின் தொடர்பெல்லாம்
ஈ-மெயிலை ஈன்றிட்ட ஈசனவன் வரத்தாலே.

ஸ்மைலிகளில், உணர்ச்சிகளைச் சித்திரமாய் வரைவதற்காய்
ஸ்பீடாக எதிர் வினையை தெளிவாக உரைப்பதற்காய்
அமைதியாய் உட்கார்ந்து அகிலத்தின் பிரச்னைமேல்
ஆழமாய் அகலமாய் பின்னூட்டம் புரிவதற்காய்
ஜமைக்காவின் ஜார்ஜும் ஜப்பானின் டோட்டோவும்
ஜாவா ஸ்கிரிப்ட் நடுவே ஜல்சாக்கள் செய்வதற்காய்
உமைபாகன் எம்பெருமான் சைபரமன் படைத்திட்ட
ஒப்பற்ற ஈ-மெயிலைத் திட்டாதே, தொலைச்சிடுவேன்.

குறிப்பு: வெப்உலகத்தில் இதை முதலி்ல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்வாசனை என்ற தொடரின் ஒரு பகுதியாக எழுதினேன். சிறு திருத்தத்துடன் இப்போது இரண்டாம் படிப்பை வெளியிட்டிருக்கிறேன்.

Comments (8)

இன்னா நாற்பது

நேத்திக்கு எம் பொண்டாட்டி என்ன அட்ச்சிட்டா.

இன்னாடா இவன் இதப்போயி இன்னா தேரியமான வலப்பத்திவுள போட்ரானேன்னு பாக்றீங்கோ நீங்கோ. இன்னா தப்பு இதல? அட்சது எம் பொண்டாட்டி. அட்சது என்ன.

இன்னார் இன்னார அட்சாங்கன்னா பின்னால கத இருக்குமில்ல? அது இன்னா மேட்ருன்னு கேளுங்க. நேத்து காலீல வேலிக்கு போவும் போது, இன்னிக்கு சாந்தரம் குடிக்காம வூட்டுக்கு வரேன்னு எம்பொண்டாட்டிக்கிட்ட நேத்து சத்தியம் பண்ணிட்டேன்.

இன்னாமே, நெஜமாலும் உன்னால முடியுமான்னு கேட்டா. ஆம்புள வுடுவனா. முடியும்மே, முடியும். இல்லன்னா நீ இன்னா சொல்றியோ அதே செய்றேன் அப்படின்னு சவாலு வுட்டேன். நாந் தெனங்குடிக்கிற தறுதல.

சாந்தரம் ஆச்சு. இன்னா இருந்தாலும் இன்னிக்கு குடிக்காம போறமே, நம்ல வூட்டுக்காரி மர்வாதையா வாவான்னு சொல்வான்னு நன்ச்சேன். பலானது இன்னிக்கு நல்லா நடக்கும்னு ஆசப்பட்டு, பூ வாங்கினு போலாம்னு நனச்சேன். போற வழில எனக்கு தெரிஞ்ச பூக்காரி – சாமந்தின்னு பேரு – ஒர்த்தி இருக்கா, அவகிட்ட மல்லிப்பூவு வாங்க போனன். ரொம்ப அயகு அந்த பொண்ணு. போம்போது வர்ம்போது ஒரு லுக்கு வுடுவா. சின்னப்பொண்ணு. நல்லா யாவரம் பண்ணுவா.

மல்லிப்பூ கேட்டேன். ஏந்.. தட்ட பாரன். மல்லி இல்லியேன்னா. இது இன்னாடா எழவுன்னு, சரி கெடக்டும் விடு, அது இல்லீன்னா இன்னா, வேற பூவு குடுன்னுபூக்காரி சாமந்தி கிட்டே கேட்டேன். அவோ சாமந்தி பூதான் கீது அப்டின்னா. இன்னா பண்றது? சரி வாங்கலாம்னு பூக்காரிககிட்டே, இன்னா வெலன்னு கேட்டேன். ரொம்ப அதிகமில்ல, உனக்குன்னா கால்ரூபா மொழத்துக்கு கம்மின்னு சொன்னா. இன்னா ஷோக்கா பேசுவா
தெர்யுமா அவ? பூக்காரி மேல எனக்கும் ஒரு இதுதான். இன்னா மேட்டருன்னு கேட்காதிங்க சார். சும்மா ஒரு லுக்குதான்.
அன்னிக்கும் கொஞ்சநேரம் ஜொள்ளு வுட்டுட்டு பூவு வாங்கினு ஊட்டுக்கு கெளம்புனேன்.

போறேய்லோ, பூவு மட்டும் போதுமா, சுவீட்டு வாங்கலாமேன்னு நெனச்சேன். இன்னா சுவீட்டு எம் பொண்டாட்டிக்கு புடிக்கும்னே
இது வரே தெரியாது. இன்னாடா வூட்டுக்காரன் இவன்னு நீங்க கேக்கலாம். ஒம்பொண்டாட்டிக்கு இன்னா சீரியல் புடிக்கும்னு ஒங்கலால சொல்லமுடியும். கேய்வி இன்னான்னா, அவங்குளுக்கு எந்த பக்கத்து வூட்டுக்காரன புடிக்கும்னு ஒங்களால சொல்லமுடியுமா. இன்னா இர்ந்தாலும் முட்யாது.

சரி, சுவீட்டு வாங்க போனனா, அங்க இன்னாடான்னா, இன்னாத்த சொல்றது, இன்னோரு பிரச்னை. நான் ஜாங்கிரி வாங்க போனன். கடக்காரன் இன்னா கேக்கிறான்னா, எந்த காலத்துல கீற நீ, பெங்காலி சுவீட்டு வாங்கிகினு போன்னு கேக்கறான். பெங்காலி சுவீட்டா, அது இன்னான்னே எனக்கு தெரியாது. காக்கிலோ இன்னா ஆவுதுன்னு கேட்டேன். காக்கிலோ காக்காவுக்கு கூட பத்தாது, இன்னா கேட்டியா, அரக்கிலோ வாங்கிக்கோன்னான். சரி, இன்னா வெல அத சொல்லு முதல்லன்னேன். இன்னா இர்ந்தாலும் நம்க்கு கட்டுபடி ஆவணும் இல்லியா? நூர்ரூவான்னான். இன்னாது? ஒரு பச்ச நோட்டு அப்படி புடுங்கறானேன்னு நனச்சேன். சரி நம்ம, அடச்சீ, என் பொண்டாட்டிக்கு தான வாங்கிட்டு போறோம்னு, முழு அம்பது ரூவா நோட்டு ரெண்டு குடுத்து வாங்கனேன்.

வழிலே இன்னாசி அண்ணன பாத்தேன். இன்னாடா பூவும் சுவீட்டுமா போறே, இன்னா விசேஷம்டான்னாரு. இன்னிக்கு குடிக்காம வூட்டுக்கு போறேன், இன்னாசி அண்ணேன்னேன். இன்னாப்பா இது, எப்டி இது முடிஞ்சுதுன்னு அண்ணன் விலாவரியா கேட்கிறாரு. இன்னா சொன்னாலும் நம்பமாட்டேன், வாய வூதுன்னாரு. வூதுனேன். உம்மைதான் போலக்கீதுன்னு சொல்லிட்டு அண்ணன் பூட்டாரு.

வூட்டுக்கு போனன். பொண்டாட்டி ஆளக்காணோம். இன்னாடாது, சவால் வுட்ட புர்சன் வர நேரம் பாத்து வெளியப் பூட்டாளேன்னு நான் பாக்கிறேன். அப்போ இன்னா நடந்தது தெரியுமா? நான் பூ வாங்கினத அவளும் பாத்துட்டா போலக்கீது. நானும் பூக்காரியும் வாய்வுட்டு பேசனத அவ தூரத்திலேந்து பாத்து கெட்ட மாரியா நன்ச்சிகினா போலக்கீது. இதெல்லாம் எனக்கு மொதல்ல தெரியாது.

நான் வந்து வூட்ல போய் ஒக்காந்துகினு இருந்தன். அவ வர்ரது தெரிஞ்சிது. தெருவுல இருந்துகினே கத்திகினே வூட்ல நொழஞ்சா அந்த ராட்சதி.
“டேய் வெக்கங்கெட்டவனே, இன்னாடா நெனப்பு ஒம்மனசில” ன்னு ஆரம்பிச்சா. எனக்கு தூக்கிபோட்சி. இன்னா ஆச்சி இவுளுக்குன்னு. ஆம்புளங்கிறத்தனாலா, கோவமாயிட்டேன். அவ உடல. “இன்னாத்தடா பண்ற உள்ளே”ன்னு அப்புறம் கத்துனா.

நானு வெவரம் புரியாம கையல பூவோடு போய் நின்னன். கிட்ட வந்து, “இன்னா பூவு இது, எனக்கு மல்லிப்பூவுதானே புடிக்கும். உனக்கு தெர்யாதா”ன்னு கேட்டா. இன்னாடா, ஆம்பிளிகிட்டே சர்க்குசமமா பேசறாளேன்னு. “இல்ல, எனக்கு சாமந்திதான் புடிக்கும்னு” ஒளறிட்டேன்.

அவ்ளோதான். அப்புறம், இன்னா நடந்திருக்கும்னு உங்ளுக்கு தெரியாதா இன்னா?.

குறிப்பு: இதே மாதிரி ஒரு இலக்கியத்தை ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி குமுதத்திலோ விகடனிலோ படித்ததாக ஞாபகம். அதை எழுதிய எழுத்தாளருக்கு இது சமர்ப்பணம். ஆனால் இதில் எழுதியிருக்கிற சரக்கு எல்லாம் 100 சதம் என்னுடையதே.

Comments (6)