Archive for கவிதை

பீட்டா கவிதைகள் 3.1

ஒரு கல்யாண்ஜி கவிதை

கல்யாண்ஜி சொன்ன
நான்கு சுவர்களும் சொந்தமில்லாத அடுக்கக வீடு,
கேப், அலுவலகம், மால் என
நிழல் விழா வாழ்வின் இருள்வெளிகளில்,
கல்யாண்ஜி பார்த்த
பாம்புப் பிடாரனும் குறிசொல்பவனும்
வருவதற்கு இடம் தராத
இந்த கேட்டட் கம்யூனிட்டியின் குறுங்குளத்தின் கரையில்,
கவிதை வராமலில்லை.

நீங்கள் செல்லத்துணியாத பாதையில் உங்கள் பேரன்
சென்று,
திரும்பவியலாத் தொலைவில் வாங்கிப் போட்ட
புதியதோர் அடுக்கத்திலும்,
அதே பூசணிக்காய்தான் தொங்குகிறது.
இருப்பது அவன் புது மனைவி மட்டும்
கூடவே மாமியார், அவர் வீட்டு பூனைக்குட்டி.

அரபுப் பாலையோ
ஸ்ட்ரைட் கரையோரமோ
மிஸ்ஸிபி தீரமோ
அலைந்து திரிகிற,
இரு வாரம் விடுப்பில் மணம் புரிந்து, 
உச்சம் புரியாது சென்றுவிட்ட,
புது மனைவியின் புதுப்புருஷனின்
பிருஷ்டத்தில்
அன்று கணக்காசிரியர் விசிறித்தள்ளிய
பிரம்பின் தழும்பு இன்னமும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது
தங்கவேட்டையின் விதிகளை.

வெற்றியின் தோல்விகளைப் புரிந்துகொள்ளும்
கணத்தில்,
புது மனைவியின் மனத்தில்
இன்னமும் எழுகின்றன கவிதைகள்.
எழுதமட்டும் தான் முடியவில்லை
கல்யாண்ஜியின் பென்சில் இல்லாததால்.

Advertisements

Leave a Comment

பீட்டா கவிதைகள் 3

தவறியது

ஒரே ஒரு ஆள், நான் மட்டுமே.
முற்றத்தில், காற்று
வீசாத நேரத்தில்,
மரக்கட்டை மேஜையில்
புதிதாக வாங்கிய பழைய கம்ப்யூட்டரின் அழுக்கேறிய விசைப்பலகையில்,
விரைந்துலாவ மறுக்கின்றன எனது விரல்கள்.

பனி பொழியும் தொலைதூரத்து நகரத்தின்
நூறாம் சாலையின் ஆயிரமாம் அறையிலிருந்து
அரட்டையில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான்
என் நண்பன்.
நான் மீண்டும் மறந்துவிட்டேன் பாஸ்வேர்டை.
மறவா பாஸ்வேர்ட் அமைக்க முன்பு காதலிகள்
எவரையேனும் கொண்டிருக்கவில்லை.
அவனது வானமெல்லாம் நிலாக்கள்.

இடிந்து தொங்கிக்கொண்டிருக்கும் இறவானத்தின்
வழியாக என்னால் பார்க்க முடிந்த தொலைதூரம்
மேகங்களுக்குச் சொந்தமானது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் ஜாவாவிலும்
ஙகர கெட்ட வார்த்தைகளைச் சொல்லத்தெரிந்த,
அவனுக்கோ
அவற்றுக்கு மேல் செல்லும் விமானங்களும் சொந்தம்.

இரண்டு மதிப்பெண்களில் தொலைத்துவிட்டேன்
அவனது நிகழ்காலத்தை.
மேகங்களுக்கு மேல் ஒரு தெனாவட்டை.
பித்து

பூக்காத கொடூரம் அது.
நீ, புழுங்கு அறைக்கனவுகளில் என்னைத் தொல்லை செய்ததில்லை.
மற்றவர்களைப் போல என்னைப் பைத்தியமாக்கவில்லை
கொண்டாட வேண்டிய இடுப்பு இது
என்று உன் பின்னால் நான் ஓட வேண்டியிருந்ததில்லை.
காதல் கடிதங்கள், காற்றோடும் கண்ணடிப்புகள் ஏதுமில்லை.

அந்த கடைசி விநாடிகளால் மட்டுமே
நான் பிணமாகிக் கிடக்கிறேன்.
நீ ஆயிரமாவது வாடிக்கையாளர் என்றாய்.
நிஜமாகவே புணர்ந்தாய்.
இன்றோடு இத்தொழிலுக்கு முழுக்கு என்றாய்.

ஒரு கொத்து புல்லட்களை
நீயே உன் யோனிக்குள் தூவிச்சிதற்றும் முன்,
மரணவாடை வீசாத முகத்துடன்,
நீ கேட்டாய் ஒரே ஒரு உண்மை முத்தம்.
விலைமாது ஒருத்தி விரும்பிக் கேட்டுப்பெற்ற ஓரே முத்தம்.
உனது ஆயிரமாவது பொய்க்காதலனால்
முன்னறியப்படமுடியாத தருணத்தில்,
முத்தத்தால் இன்புறுவாய் என எண்ணியிருந்த நொடியில்,
உள்சிதைந்து இறந்தாய்.
ஆயிரம் காதலற்ற இரவுகளின் கதையை நீ முடித்த விதம்,
நூறாயிரம் துயரகாவியங்களினும் பெரிது.

பித்து பிடித்தலைகிறேன் நான் இன்று.
காதலற்ற, காமமற்ற, காத்திருத்தலற்ற
பித்து பிடித்து.

கதைசொல்லி

காட்டு ராசா. வன ராணி.
சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய்.
ஏரி, முழுவதிலும் ஆகாயத் தாமரை.
செக்கர்வானம். நெடுந்தொடர் மலை.
விரியாழி. பனிப்பாறை, நீர்மூழ்கும் கடற்கன்னி.
மகாராணி வசிக்கும் நூறுமாடி கோட்டை.
பேய், கடவுள், சித்திரக்குள்ளர்கள், சின்ட்ரெலா.
இவற்றின் விசித்திரங்களை
நான் என் மகளுக்குச் சொன்னபோதைவிட
அவள் எனக்குச் சொன்னபோதுதான் –
கதை இருந்தது.

 

 

 

 

 

 

Comments (1)

பீட்டா கவிதைகள் 2

  

குழந்தைகள் கிளிஷேக்கள்

குழந்தைகள் கிளிஷேக்கள்.
எனினும்
ஒரு கவிஞனாலும் அவற்றினும் புதுமை செய்யவியலாது.

வாய் குழைத்து கை நீட்டியது,
மார்பில் மூச்சா போனது,
பூச்சி விழும் சப்தத்துக்கும் திடுக்கிட்டழுதது,
என மாறாப் பிள்ளைத்தமிழ்கள்
ஒவ்வொருவரின் நாட்குறிப்பிலும்.

அது தாயின் முலைக்காம்பை நோக்கி பாயும் விதமும்
தந்தையின் மீசைக் கண்டு விழிக்கும் விதமும் மாறியதில்லை.
காலத்தின் ஒரே நம்பிக்கை
கையில் ஈரம் படர கால்களை உதைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த குழந்தை ஒருநாள் பயங்கரவாதியாகலாம்.
பிச்சைக்காரியாகவோ டெய்லராகவோ ஆகலாம்.
டீச்சராக, இல்லத்தரசியாக ஆகலாம்.
முரட்டு எஜமானனாகவோ தூக்கிலிடுவோனாகவோ ஆகலாம்.
கடன்காரனிடம் மாட்டிக்கொள்ளாமலிருக்க செல்ஃபோனை அணைத்து வைக்கலாம்.

இந்த குழந்தை அந்த குழந்தையை ரேப் செய்யலாம்.
வேடிக்கை, வினோதம், விதிவசம்!
யாரும் அவர்களின் குழந்தைகளை
– எதிர்கால பயங்கரவாதி, பிச்சைக்காரி, இன்னோரன்னர் என்றன்றி-
குழந்தைகளாகத்தான் பார்க்கிறார்கள்.

இப்படித்தான் நாமும் முன்பிருந்தோம்
என்பதை நான் நம்புவதற்கில்லை.
எனது குழந்தையின் இந்த பருவத்தை
பாவியான நான் கடந்திருக்கவே இயலாது.

இவ்வளவு வெளிச்சத்துடனும் எதிர்பார்ப்பின்றியும்
ஒரு புன்னகையையும் நான் பூத்திருக்க மாட்டேன்.

 

அதனதன்

ஆறு நாணல்களுக்காக ஓடுவதில்லை
நாண்ல்கள் கரைகாக்க நிற்கவில்லை.
மீனும் மீன்கொத்தியும் உடன்பாடுகளுடன் பிறக்கவில்லை.
யாரும் யாரும் யாராகியரோ?
நான் கொடுத்த காசுக்கு
நீ தருகிறாய் நாலு இட்லி, கால் ஸ்பூன் சட்னி.
சில்லரை, இல்லையேல் சாக்லட்.

கதை இத்தோடு முடியவேண்டும் தானே?

குறுங்கவிதை ஒன்று

“விட்டுவிடுங்கள்.”

“சரி.”

குழந்தைமை

இழப்பதற்கென்றே ஒரு பருவம்.
உனக்கு இழப்பதற்கு எல்லாம் இருக்கிறது.
பெறுவதற்கோர் பொய்யுலகமும் உண்டு.

என் சின்னஞ்சிறு பெண்ணே,
காலம் உறைந்து நிற்கட்டும் என்று சபிக்க வாய்ப்பில்லாத எனக்கு
நீ பார்க்கிற பார்வைகளை நினைவில் உறைவித்து
எடுத்து வைக்கும் திறனாவது இருப்பின்,
கடவுள் உண்டென்று ஒப்புக்கொள்வேன்.

இரவுப்பயணம்

மோட்டலில் நின்றது பஸ்.

தூக்கக் கலக்கத்தில்
சிறுநீர் குடிக்கவும் டீ கழிக்கவும்
இறங்கினேன். திரும்பினேன்.

எல்லா ஆம்னி பஸ்களும் ஒரே மாதிரியாக.
எதிலும் இல்லை ஊர்ப்பெயர் பலகைகள்.
மதுரை – சென்னை, சென்னை -மதுரை எல்லாம் ஒன்றுதான்.

என் மார்க்க வாகனம் எது?
இதுதான் என்று உத்தேச உத்தரவாதமாய் ஏறிய பஸ்ஸில்
அடையாளம் ஏதும் உள்ளும் இல்லை.

ஊரில் ஏறும் போதே இருட்டு.
எதுவும் பதிந்திருக்கவில்லை.

இது என் சூட்கேஸ். பக்கத்து சூட்கேசும் அதே மாதிரி இருந்தது.
திறந்து பார்த்தல் நாகரீகமில்லை.
என் பெட்டியில் பெயரொட்டுவதோ பூட்டுப் போடுவதோ கிடையாது.
இது என் வாட்டர் பாட்டில். பக்கத்து பாட்டிலும் அதே கம்பெனி.
குடித்திருந்த அளவும் அதேதான்.

பக்கத்தில் இருந்தவன் வரட்டும் எனக் காத்திருந்தேன். வந்தார்.
இருட்டில் ஏறுகையில் முக அடையாளம் பார்க்கவில்லை.
உட்கார்ந்திருந்த நான்கு மணி நேரமும் முகம் பார்க்கவில்லை.

“நீங்கள் தான் என் பக்கத்துச் சீட்டுக்காரரா?”
“உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்களும் எங்கள் பக்கத்துச் சீட்டுக்காரரா என என்னால் தீர்மானிக்கவியலவில்லை”
பக்கத்து வீட்டுக்காரனே தெரியாதாம் அவனுக்கு.

“வண்டி மாறி ஏறிவிட்டிருப்போமோ?”
“ஒரு வேளை நானும் மாறிப்போயிருக்கலாம்.”
“வண்டி எடுக்கட்டும், பார்க்கலாம், “அநேகமாக, அதே சரத்குமார் படம் தொடரலாம்.”
“எல்லா வண்டியிலும் அதே படம் தான் ஓடும்.”
துணிந்து அமர்ந்தேன்.

சென்னை மார்க்கமோ, மதுரை மார்க்கமோ வண்டி திரும்பியது.

நிமிடங்களில் என்னை சூழ்ந்து அமைதியாக்கிய துயில் மட்டும்
கலைந்ததற்கு முன்பிருந்ததன் தொடர்ச்சிதான்.

முடிந்த விஷயம்

சாலை ஓரத்திலிருந்து சில அடி தூரம்.
மறைக்கத் திறனற்ற ஓணான் செடிக்கூட்டம்.
முக்கால் நிலவு வானில்.
சாயுங்காலம் தான் இன்னும்.
இன்னும் ஏழெட்டு வண்டிகள் பாக்கி.
எனினும், அவசர அவசரமாய்
நான் இடம்கொடுத்தேன் அவனுக்கு.

அனுமதிக்கப்பட்ட மணித்துளிகள்
மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தும்
அந்த நிலவு மீண்டும் உதித்ததில்லை
என் புகுந்த வீட்டின் முற்றத்தில் பின்.

திட்டமிடல்

திட்டமிட்டு கவிதை எழுதமுடியாது.
முன்தேதியிட்ட காசோலை கொண்டு
சிவப்பு விளக்குப் பகுதிக்கு செல்லமுடியாது.
திட்டமிட்டு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
திட்டமிடல்.

Comments (4)

பீட்டா கவிதைகள்

என் பையனின் ஹெட்மிஸஸ்
பண்ண முட்டாள்தனம்

பாடம் நடந்தது,
தூக்கம் வந்தது,
வெளியே பாத்தேன்
டவர் தெரிந்சிது
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்

பெஞ்ச் மேல் ஏறுன்னு
சொன்னாங்க மிஸ்.
இப்போ டவர்
தெரிஞ்சுது
இன்னும் நல்லா.
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்.

வெளியே போன்னு
சொன்னாங்க மிஸ்.
அவங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும்பா.
வெளியே போனேன்.
இப்போ டவர்
ஃபுல்லா தெரிஞ்சது.
பிடிச்சுப்போச்சு.
பாத்துகிட்டே இருந்தேன்.

ஹெட்மிஸஸ் வந்தாங்க.
என்னன்னு கேட்டாங்க.
இன்னன்னு சொன்னேன்.
அவங்க முட்டாள்பா.
மிஸ் என்ன
ஃபனிஷ் பண்ணாங்கன்னு
சொல்லாறாங்கப்பா.

நன்றியறிதல்

சுடப்பட்ட துப்பாக்கி ரவையைப் போல
வரலாறு இழந்தவனின்
முகத்தில் அறைந்து செல்லும்
கோபம் தணியாத காற்றின்
ஏக்கங்கள் தெளிவானவை.
நீதான் அதற்கு நன்றி சொல்ல மறந்தாய்.

காற்றைப்போல நண்பன் யாருமில்லை.
காற்று ஒரு விஷயத்தை மறப்பதில்லை.
பருவகாலங்களில் மேகங்களின் வடிவங்களையும்
வலசைப் பறவைகளின் வழிச்செலவையும்
புயலின் போது தூக்கியெறியப்படும்
பொருள்கள் வீழும் எறிபாதையையும்
அது மாற்றியதேயில்லை.

பனிக்காற்றும் புயல்காற்றும் சூறையும்
தென்றலும் புழுதிக்காற்றும்
பிரளயக்காற்றும் எரிமலை தழுவிய தழல்காற்றும்
சுடுகாட்டு பூமாலைகளின் நாற்றம் தழுவியதொன்றும்
காமம் நிறைந்து பரவிய
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
புகையுடன் நிறைந்து
ஏசியில் நடுங்கிச்செத்த இன்னொன்றும் என
காற்றின் உலகுகள் நிறைய உண்டு
இப்பிரபஞ்சம் முழுக்க.

நீ அதிர்ஷ்டக்காரன் அன்றோ?

உன் கடைசி மூச்சுக்குப் பிறகு எரிதழலைத் தாலாட்டவுள்ள காற்றை
காதலாகி கசிந்துருகி கட்டிலா வெளியில் தழுவலாம்.
நன்றி தெரிவிக்கும் முகத்தான் அதனுள்
உயர்ந்த சிகரெட் புகையை மட்டும் உட்செலுத்தலாம்.
சட்டையின்றி அழுக்கேறிப்போன உன் அக்குளை அதற்கு காட்டாதே.
அநாகரிகத்தின் உச்சம் அது.

நேற்று, ஒரு ஷாப்பிங்மாலில்
நற்காற்று உருவாக்கிTM எந்திரத்தைப் பார்த்து
மிரண்டுபோயிருந்த என் மனம்
கார்காலத்தின் முதல் ச்சில்காற்றின்
வருடலில்தான் நெகிழ்ந்தது.

காற்று நன்று.
வெற்றிகரமான இரவுகளின் நடுவில்
உனது நன்றியை பெருமூச்சினூடாக
தெரிவித்தல் இயலாது இல்லையெனில்.
அவள் தோளில் அழுந்த படிந்த
உன் வன்மத்தை மெல்லென ஊதி
இளக்கவும் இயலாது.

இரு மலைப்பாறைகளுக்கிடையில்
பேரூழியாய் வளைந்துசென்று
பள்ளத்தாக்கில்
ஹோவென விரிந்து விடுபெறும்
காற்றை நினைவுறுத்தும் விதமாக,
உங்கள் இருவரின் இறுக்கத்தின் போது
அடிவயிறுகளின் இடைவெளிக்குள்
புகாமல் நிறுத்தி,
ஒரு மென்புன்னகையோடு காற்று வெட்கித்திரும்ப,
மாறா அன்புப் பதிவேட்டில் மேலும் ஒரு கையொப்பமிட்டு
குடும்பம் சிதையாமல் பார்த்துக்கொள்கிறீர்களே,
அதற்காக சொல்லுங்கள் ஒரு நன்றியை.

எத்தனை கோடானுகோடி நன்றிகள்
சுமந்த காற்று அது. எனினும்…

பெறுவதற்கோர் பொன்னுலகம்

நிரல்வரிகளின் நிழலிலிருந்து மீண்டு
சற்றே ஆக்ஸிஜன் ஏற்றிக்கொள்ளும்
பொருட்டு வெளியே சென்ற போது,
பெருமிதம் கொண்டது என் நெஞ்சு.
இன்று கிடைத்தது எனக்கு பதவி உயர்வு.
அடுத்தமாதம் இந்த நாள்
செல்வேன் நான் செல்வச்சீமைக்கு.

மென்வல்லரசின் குடிமக்கள் யாம்.
ஏகாதிபத்தியத்திற்கு யாம் வழங்கிய
எஃபெக்ட்டிவான ERP Solutions ஆல்
கிடைக்க பணத்தில்
அடுத்த ஆயிரம் பேர் வீட்டில்
அடுப்பு எரியும், அறுவகை சுவை தர.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத்,
பிலிப்பைன்ஸ், வியத்நாம், எஸ்டோனியா.
எங்கும் பரவும் மேகப்பிரதிபலிப்பு வானாளாவிகளில்
எனக்கென்று ஒரு வானம், ஒரு உலகம்,
ஒரு மல்ட்டி கரன்சி பாங்க் அக்கவுண்ட்.

எனக்கென விரிகிறது சர்வீஸ் சந்தை.
கேட்காமல் குவியும் கிரெடிக் கார்டுகள்.
என் நிதியை நிர்வகிக்க 274 கன்ஸல்ட்ன்ட்கள்.
கல்யாண சந்தையில் டாக்டர்களைத்
தீர்த்துக்கட்டியவன்.
மிகவும் ஸ்மார்ட் ஆனவன்.
எடைக்கு எடை தங்கமனசு.

கான்டலீஸியா ரைஸா, ஹிலாரி கிளின்ட்டனா
தேர்வு செய்வேன் நான்.
அவுட்சோர்ஸிங் மறுப்பாளை அமெரிக்கா மறுக்கும்.
நாட்டின் வெளியுறவுக்கொள்கைக்கும் என்னிடம்
உண்டு டெம்ள்ப்ளேட்கள்.
நான் புறநகர்களில் மண்தரைகளை
பொன்தரைகளாக மாற்றியவன்.
சென்ட்ரல் பிஸினஸ் டிஸ்டிரிக்டில்
எக்ஸ்ட்ரா டீலக்ஸ் லக்ஷூரி அபார்ட்மென்ட்டில்
சதுர அடி 4k தானாம். வொர்த்டா மாங்கா.
க்ளோஸ் த டீல்!

வன்பொருள், மென்பொருள், என்பொருள்.
இனி ஏன் நான் டே டிரேடிங்கிலும் இறங்கக்கூடாது?
பாருங்கள், தந்தையரே பாருங்கள்.
இது புதிய இந்தியா.

நான்காம் உலகநாடுகளின் புதுச்சந்தைப் போக்குகளை
நன்கறிந்த கேபிஓ கம்பெனியில்
என் தோழி இருக்கையில் எனக்கென்ன கவலை
இவ்வீக்கெண்ட் குறித்து?
கீழ்க்கடற்கரை சாலையில்
மேல்கலாச்சார சாரலில்
நூறாவது முறையாக மீறுவேன் எல்லையை.

இந்திய மூளைகளா கொம்பா!
ஆன்சைட் பயணத்தின் போது கண்டேன்.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸில் கையெடுத்து கும்பிட்டு,
காலை உணவாக இட்லி.
சுடச்சுடத் தந்தார்கள்
கிழக்கிந்திய கம்பெனியின் ஆவி பறக்க.

இங்கேயோ,
விரிக்கும் சிறகுகளில் பறக்கும் இந்தியக்கனவுக்கு
மேலும் மேலும் வேண்டுவது இன்டர்நேஷனல் ஏர்போர்ட்கள்.
வேளாண் நிலங்களில் டாலர் அறுவடை செய்ய
மேலும் மேலும் கிரீன்ஃபீல்ட் புராஜெக்ட்கள்.

எல்லாம் சரியென்றபோதிலும்
எதிர்த்து நிற்கிறார்கள் காரட்களும் கவுடாக்களும்
வேண்டுமாம் அவர்களுக்கு ரூரல் ரெவல்யூஷன்.
போங்கடா எங்கேயாவது போஸ்னியாவுக்கு என்பேன்.

லட்சத்தில் நாங்கள் சம்பாதிக்கிறோம் என்றால்
உனக்கேன் வயிற்றெரிச்சல்.
உனக்கு வேண்டுமா, போய் ஜாவா படி.

மின்வெளியில் விற்க வெங்காயங்களுக்கும் தடையில்லை.
வறுமை ஒழிய சப்-10 பி.ஸி.
நோகியா ஃபோனில் வயலும் வாழ்வும்.
இனியேன் எதிர்க்கிறீர் புதியதோர் உலகை.

To: editor@sengathir.com
sub: Anti-globalization poetry
Attachment: pp.doc

நலம் தானே தோழர்,
நீங்கள் கேட்ட உலகமயமாக்க எதிர்ப்பு கவிதை
அட்டாச்மென்ட்டில்.
பூர்ஷ்வா பார்வை கொண்ட
ஒரு சாஃப்ட்வேர் புரபஷனில் பார்வையில் எழுதியது.
அவனது சுயநலம் தொழிலாளரை எரிச்சல்படுத்தும்.
பார்ட்டி தீர்மானத்துக்கும் பதமாக இருக்கும்.
யூனிகோட்டில் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
வெளியிடுங்கள் ASAP.
மற்றபடி
விப்ரோவில் சேர்ந்த உங்கள் மகனுக்கு எப்போ கல்யாணம்?
மாட்ரீமோனியல் டாட்காமில் அவன் புகைப்படம் பார்த்தேன்.
பாப்பாரப் பையன் மாதிரி இருக்கான்யா.)

மிஸஸ். நாவலிஸ்ட்

நல்ல நூல்களை பொறுக்கித் தருவது
என் கணவரது பொறுப்பு.
அவ்வேளையில் காய்கறிகளை நறுக்கி
தயாராவது என் பொறுப்பு.
எப்போதும் நான்
படைப்பிலக்கியங்களை
சமையலறையில்தான்
வாசிப்பேன்.
அன்று சாம்பார் அடிபிடித்துவிட்டது
என்றால் நான் படித்தது ஒரு நல்ல
நாவலைத்தான் என்பதற்கு அறிகுறி.
ரசம் மிதமிஞ்சி கொதித்துவிட்டது என்றால்
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு
நிச்சயம் விருது
என்று அர்த்தம்.

தோசை சுடும்போதும் படிப்பாயோ
என்றார் கணவர்.
ஆம் என்றேன். முல்லாக் கதைகளை
அவ்வாறே படித்தேன்.
டின்னருக்கு இரண்டு பிள்ளைகள், மூன்று வயதானவர்கள்
மற்றும் கணவர்
என்றால் நான் எத்தனை
கவிதைகளைப் படித்திருப்பேன்
என்று கணக்குப் போடுங்கள்.
கடைசியில் எனக்கும் இரண்டு அடைகள்.

நாவாலாசிரியரான என் கணவருக்கு
இப்படி ஒரு மனைவி வாய்த்ததில்
பெருமிதமே.
இப்படி ஒரு இலக்கியவாதி என்
ஆம்படையானானதில் எனக்கும் சந்தோஷமே.

அதனால்தான் வெளிவரும் போதெல்லாம்
அவரது நாவலின்
முதல்பிரதியை பைண்டிங் வாசம்
தீருமுன் என்னிடம் தருவார்.
நான் சமையலறைக்குச் செல்வேன்.
அன்று அவருக்கு
அட்டகாசமான விருந்துதான்.

நாடகம்

உனக்கு விருப்பம் இல்லையெனில்
நடையைக்கட்டு.
காதலின் நூறாவது கட்டுக்கதை இது.
காமம் இல்லை. கர்வம் இல்லை.
கவிதை இல்லை. கவலையும் இல்லை.
நீ நான் நாம் என உறவும் இல்லை.
ஊடலும் இல்லை.

பெரியதோர் இரும்புக்கோட்டையின் எஃகுக் கதவுகளுக்கு அப்பால்
சிறைபட்டிருக்கும் இளவரசியும் இல்லை நீ.
உன்னை மீட்கும் எவ்வித பொறுப்பும் எனக்கும் இல்லை.

உனது மனத்தின் கனம்
ஒரு மெல்லிய சாம்பல் படலத்தினும்
மெல்லிது.
கடல் அலைகளின் கரைப்பிடிப்பினும்
குறைந்த பற்றுதல் அது.

வெயில்நேரத்தில் உனக்கொரு
ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுக்க
முடியாதபோது
என் வருங்கால இல்லறம்
குறித்து கவலை கொண்டாய்.
நோகா காதலென்று எதுவுமில்லை
என்றாய். நோகட்டும்.
நெருப்பு தணிந்தது என நினைத்தேன்.
பின், ஏன் எஸ்எம்எஸ்ஸில் வரவில்லை
இன்றைய ஏ-ஜோக்.

நமக்கென்று வேண்டாம்
பரஸ்பர எதிர்ப்பார்ப்புகள்,
உடன்பாடு ஒன்றை எட்டுவோம் என
அடையாறில் வைத்து நீ முன்மொழிந்த
கோட்பாடு என்னை அதிர்வுறச் செய்தது.

உன் பிறந்தநாளில்
அந்த புதிய சல்வார் கமீஸை
நான் வாங்கித்தந்த போது,
வேண்டாம் என புறக்கணித்தாய்.
புரிந்துகொண்டேன்.
ஒருதரப்பு ஒப்பந்தம் அமலில்.

உன் அப்பாவுக்கு கடமை உணர்வு மிகுந்து
ஜாதக புத்தகத்தை கையில் எடுத்த அதே நாளில்
காதல் மண்டையைப் போட்டது.

இது நடக்கும் என்று நமக்குத் தெரியும்.
நமக்குள் பொதுவாய் இருந்த ஒரே எதிர்பார்ப்பு
அது மட்டுமே.
எனினும், நாம் ஏன் ஒருநாளாவது காதலர்களாக நடிக்காமல் இருந்திருக்கக்கூடாது?
பிரிவு என்னும் பொய்மையை
இன்று பாடாமல் இருந்திருப்பேன்.
நீயும் சல்வார் கமீஸ் அணிந்திருப்பாய்.

ஒரு எல்.ஐ.சி. கவிதை

இந்த மாரிக்காலத்தில்,
தெருமுனையில் லாரியுடன்
என் வண்டி மோதி
டிரைவர் மரணித்தார்.

நீலநிறமான புகைமண்டலத்தின் குளிர்ந்த மூச்சுமூட்டலில்
டிரைவர் தனது கடைசி விபத்தை நிறைவேற்றிய
திருப்தியில் மறைந்தார்.
இனி அந்த சாலையில் நீங்கள் தைரியமாக நடந்து சென்றே
உங்கள் எதிர்வீட்டு அம்மாளிடம் கைமாற்றாக
சர்க்கரை வாங்கலாம்.

மேலும் மேலும் வண்டிகள் அந்த சாலையில்
முன்பு மோதப்பட்டதுண்டு.
வெற்றிகரமாக மோதி நிறுத்தியவன் நானே.

மாரிக்காலம் முழுமையாக தன் அர்ப்பணிப்போடு
பரந்திருந்தது அந்த சாலையின் ஓரங்களில்.
முதற் புற்கள், காளான்கள், சொதசொதப்பான வேர்கள்.
மரத்திலிருந்து குளிர்தாங்காமல் விழுந்தன சில புட்கள்.
அவற்றை நசுக்கிச்சென்றன சேறு அப்பிய சான்ட்ரோக்கள்.

எனது கண்களும் செருகின.
மூக்கில் இறங்கிய சேற்றில்
அடங்கபோகிறது என் இறுதி மூச்சு.
வண்டி கவிழ்ந்த அழகில்
எனது மார்பில் குத்திய இரும்புக்கம்பியின்
ஆழத்தில் என் தலைமுறை புதையுறப்போவதை காணச் சகிக்கவில்லை.
நீலநிற புகைமண்டலத்தின் குளிர்ந்த மூச்சுமுட்டலில்
டிரைவர் இறந்தது சனிக்கிழமை.
அவர் தனியாகவோ ஏகுவார் விண்ணுலகுக்கு?

என் அன்பான மனைவிக்கு வேண்டுகோள்.
குத்திய இதயம் குத்தியது தான்.
நீ மறக்காமல் லாரிக்காரன் மீது கேஸ் போடு.
என்னிடம் இல்லை எந்த ஆயுள் காப்பீடுகளும்.

தினசரி நான் டிவியில் குளித்துக்கொண்டிருந்த போது
எனக்கு நினைவுபடுத்தியிருந்தால்
ஒரு வேளை நான் சம்பாதித்திருப்பேன்.
அப்போது ஒருவேளை நான் இந்த பக்கமாக வந்திருக்கமாட்டேன்.
ஒருவேளை இது வார இறுதி நாள் இல்லை என்றால்
டிரைவரும் மெதுவாக வந்திருக்கலாம்.

கடவுளை மன்னிப்பதற்கில்லை

சுனாமி வருவதற்கு சில மாதங்கள் முன்பு
வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தேன்.
அற்புதமானதோர் தேவாலயத்தின்
மூடப்படாத கதவுகள்
என்னை நெடுங்காலமாக ஈர்த்துக்கொண்டிருந்தன.
நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய்…

மண்டியிட்டுப்பார்த்தேன், கைகளை மார்பில் புதைத்து.
கடுமுயற்சி கொண்டு அழப்பார்த்தேன்.
தேவனோடு சிறிதுகணம் சேர்ந்து
சுவர்க்கத்தின் வாயிலை
தொலைதூரத்திலிருந்து
பாவங்களின் முகிற்கூட்டங்களினூடகவேனும் அல்லது
பெரும்புதர்க்குழியில் விழும் சாத்தானின் கரைச்சல்களுடையிலேனும்
பார்த்தே விடுவது என முயன்றேன்.
தோல்வி.
இறுதியில் ஒரு மலையாள ரெஸ்டாரன்ட்டில்
வேர்க்கடலையையொத்த அரிசிச்சோற்றைத் தின்றுவிட்டு
திரும்பியதுதான் மிச்சம். மீன் குழும்பு நன்று.

கழுவேற்றப்பட்ட ஆயிரம்லட்சம் சமணர்களை மறந்துவிட்டு
போனால் போகட்டும் என சோமசுந்தரரைத் தொழப் போனேன்.
காதலாகி கசிந்து மல்க ஆனது மட்டும் முயன்று,
அன்று பழகிய திருவாசகத்தை மீண்டும் சொல்லிப்பார்த்து,
பொன்னார் மேனியனின் அடியில் விழ முயன்று,
தோல்வி.
இறுதியில் என் பிள்ளைக்கு பொம்மை கார் வாங்கிக்கொண்டு
சுண்டலைச்சாப்பிட்டுவிட்டு திரும்பியதுதான் மிச்சம்.

கடவுளை நான் கைவிட்டுவிட்டேன்.
அவர் எனக்குக்குள் வரமறுத்தார்.

ஒருமுறை புத்தரிடம் சென்றேன்.
நல்லவேளை இவர் இன்னும் இலங்கையில் கொல்லப்படவில்லை.
இவருக்கு உதவியாக ஜப்பானியர்கள் இன்னும் ரோபாட்களை உருவாக்கிவிடவில்லை.
துரதிருஷ்டவசமாக அவர் எனக்குப் பிடித்துப்போயிற்று.
இவரது சீனச் சிரிப்பு எனக்கு பிடிக்கும்.
முட்டாள் இந்தியர்களின் மிகப்பெரிய ஏற்றுமதி இவர்தான்.
ஆனால் அவரிடம் இல்லை கடவுள் ஈர்ப்பாற்றல்.

அற்புத சித்திகளை அறியாத நபிகளோடு எனக்கு விருப்பம் இல்லை. சுத்த போர்.

யாரையும் நான் நம்பத்தயாரில்லை குரு அவர்களே.
எனக்குள் தேடவும் இஷ்டமில்லை.
எனக்குள் இருப்பது கனவுகளின் சுரங்கம் மட்டுமே.

கடவுளை விரட்டிவிட்டு
நான் சுகமாக இருக்கிறேன் என்பதை
யாரும் நம்பவில்லை.

மழை பெய்வதுபோல் இயல்பானது அது.
கேள்வியும் இல்லை, பதிலும் வேண்டாம்.
நீ ஏன் மலைச்சிகரங்களை அடகுவைத்தவனைப் போல
துடிக்கிறாய்?
பனி உருகுவது போல இயல்பானது அது.
கடவுளை நான் கண்டுகொள்வதில்லை..
இது ஏன் உனக்கு பிரச்னை அளிக்கிறது?
ஆறுகளிடமிருந்து கடன் வாங்கியவனைப் போலத் துடிக்கிறாய்?
நீ எப்போது தெய்வத்தின் ஏஜென்ட் ஆனாய்?
நான் எப்போது உன்னை எனது அதிகாரபூர்வ ஆத்மநிர்வாகி ஆக்கினேன்?

திறவாத கோயில்களே கோயில்கள்.
வணங்காத தெய்வங்களே தெய்வங்கள்.
செல்லாத நெறியே நெறி.
கடக்காத வானமே வானம்.
போதுமா என்வசமுள்ள சரக்கு? நீ நடையைக் கட்டு.

நான் கடவுளோடு கடைசியில் சண்டைபோட்டது
1996இல். அத்தோடு முடிந்தது சகவாசமெல்லாம்.
அவரவர் வழியில் குறுக்கீடு இல்லை.

ஒருமுறை மும்பை குண்டுவெடிப்பில் அவர் இடது கால் பிய்த்தெறிந்துகொண்டு போனது என்று கேள்விப்பட்டு
வருந்தியபிறகு
மேலும் கூடுதல் நம்பிக்கையை நான் வைத்தது சிலந்தியிடம் மட்டுமே.
சூடு சுரணையின்றி கடவுள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார்?
இது தவறான முன்னுதாரணம்.
கடவுள் பயங்கரவாதிக்கு பணிந்துவிட்டார்.

பனி பார்த்தது

கடலுக்கு அப்பால் அப்பாவின் கப்பல்.
உறைபனிப்பருவம் தொடங்கியது.
மூர்மான்ஸ்க் துறைமுகத்தில் எல்லோருக்கும் விடுமுறை.
சிறிய மகன் கரையில் காத்திருக்கிறான்.
பனி உருக வேண்டும்.
அப்பா வருவார் அப்போதுதான்.
பொம்மையும் புதுச்சட்டையும் வரும்…

பனி உருகவேண்டும் என்ற அந்த ருஷ்ய சிறுகதையை
நான் இன்னும் மறந்திருக்கவில்லை.

சிறுவயதில் பனியைப் பற்றி நிறையப்
படித்திருக்கிறேன்.
ஏகப்பட்ட கதைப்புத்தகங்கள்.
எல்லோம் ஐரோப்பிய கதைகள்.
பனி மோகம் பிடித்தது அப்போதுதான்.

என் ஊர் ஒரு ஊரே அல்ல.
என் நாடு ஒரு நாடே அல்ல.
என் வானம் ஓரவஞ்சனை மிக்கது.
இங்கே பனி பொழிவதில்லை.

நான் முதலில் பனி பார்த்தது
ஒரு பின்லாந்து நகரத்தில்.
ஆர்ட்டிக் வட்டத்துக்கு கீழே
நூறே கிலோமீட்டர் தொலைவில்.

முதல் காதல் கெட்டது போங்கள்.
முதல் முயக்கம் என்ன செய்யும் அதை?

ஹோட்டலின் பெருங்கண்ணாடி ஜன்னலில்
வெளியே பனிக்கொட்டியதைப் பார்த்து
காணாது கண்டதைப் போல நான் ஓட
சக ஐரோப்பிய தங்குநர்கள் சிரித்திருப்பார்கள்.

ரிசப்ஷனிஸ்ட் அறிவாள் என்னை.
சொல்லி வைத்திருந்ததைப் போல
பனி பொழியத் தொடங்கிய போது
இன்டர்காமில் சொன்னாள்.
You’re lucky, Shentyll. It’s snowing out there”

அந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவென்றாள்.
அதிர்ஷ்டம். பேரதிருஷ்டம்.

அதை எவ்விதம் சொல்வேன்?
கபில பரணர்களும் சொல்லாத உவமைகளுக்கு
செல்வதெங்கே.
இங்கே பனி பொழிவதில்லை.

மீச்சிறு முல்லைப் பூக்களின் மாரியோ, அல்லது
குளிர்ந்த கண்ணாடித்துண்டுகளின் மெல்லிறக்கமோ, அல்லது
சிதறுண்ட ஆலங்கட்டிகளின் சாரல்விழாவோ, அல்லது
துருவிய தேங்காய்த்துண்டுகள் குளிர்த்தென்றலில் இறுகிச் சிதறிவிழுகின்றவோ, அல்லது..

தீர்ந்துபோனதென் உவமைவங்கி.

பொழிபனியில் நடந்தேன்.
கால் அமிழ அரையடி பனிப்படலம்.
கூரைகள்மீது வெண்திரை போர்த்தி,
மரங்களில் பனிவண்ணம் தீட்டி,
சாலை விளக்குகளின் ஒளிவட்டத்தில்
ஈசல்கள் போலத் தோன்றி,
என் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டிக்கொண்ட பனித்தேவதையே, நீ செத்தொழி.

குட்டிப்பயலானேன், சாலையில்
எகிறி குதித்து அதன் மீதே இறங்கினேன்.
என்னைக் கடந்து சென்ற கார்கள்
வளைவில் ஆட்டம்கண்டு விழாமல் சென்றன.

நறுக் நறுக்கென என் ஷூவின் கீழ் சப்தம்.
மென்பனி இறக்கம், சரசரப்பு.

ஊவ்லு ஆறு உறைந்திருந்தது.
உறைந்தேன்.
உறைந்த ஆற்றை பார்த்திருக்கிறீரா நண்பரே தமிழ்நாட்டில்?
இது சபிக்கப்பட்ட தேசம்.
இங்கே பனி பொழிவதில்லை.

நாளை சம்பாதித்தால்
ஸ்டாக்ஹோமில் அல்லது நோவஸிபீர்ஸ்க்கில்
கால் காணி நிலமாவது வாங்குவது சத்தியம்.

பனிப்பொழிவு தொடர்ந்தது.
உறையணிந்த கைகளில் ஒரு பிடி பனி அள்ளிப் பார்த்தேன்.
விம்மிய நெஞ்சம் சில்லிட்டு அடங்க! பேராசை அற்றுப்போக!
விழிகளின் மீது கொட்டினேன்.
முகம் உறைந்தும் முத்தம் கொடுத்தேன்.

இந்த பனி உருகக்கூடாது.

துரோகம்

நண்ப, நீ என் வீட்டுக்கு வருவதில் சந்தோஷமே.
எனினும் உன் நமட்டுச் சிரிப்புக்கு அஞ்சுகிறேன்.
எனது வேண்டுகோளை நீ புறக்கணிக்காதே.

அந்த ஹாஸ்டல் நாட்களில்
நாம் தனியாத அடித்தக்கூத்துகளைப் பற்றி நினைவு படுத்தாதே.
நாம் வாழ்வது பாலியல் நாட்டம் குறித்த முற்பட்ட கருத்துக்களைக் கொண்டதோர் தேசமல்ல.

எனது மனைவி அதைப்பற்றி தெரியாதிருக்கட்டும்.
எனது அலுவலகத்தில் இனி நான் புது நண்பர்களை ஆக்கிக்கொள்ள மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

அது நன்றாகத்தான் இருந்தது.
எனக்கு கால்கட்டே வேண்டியிராதென்று நினைக்கும் வகையில் நீ என்னைக் காதல் புரிந்தாய்.
எவ்வளவு கெட்ட வார்த்தைகள் நமக்கு தெரிந்திருந்தன!
ஆனால் நாம் சைட் அடித்ததேயில்லை.
பெண்களைக் கண்டால் பெருமிதத்தோடு ஒரு பார்வை.
போங்கடி நீங்கள் இல்லாவிட்டால்…
அவர்கள் போகத்தான் செய்தார்கள்.
உன்னிடமும் என்னிடம் என்ன இருந்தது ஈர்க்க.
நாம் கூட்டுறவு கொண்டோம் நெஞ்சம் கலங்காதிருக்க.

நீ வராமலேயே இருப்பது நன்று எனவும் தோன்றுகிறது.
ஒருவேளை எனது மாப்பிள்ளைப் பொலிவு கண்டு நீயோ
உன் கற்பிழக்கா நிலை கண்டு நானோ மீண்டும் கலந்துரையாடுவோமெனில்.
பேசுவதற்கு என்ன இருக்கிறது? வேண்டாம் துரோகம்.

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்.
நீ கல்யாணம் செய்துகொள்.

Comments (2)