பீட்டா கவிதைகள் 3

தவறியது

ஒரே ஒரு ஆள், நான் மட்டுமே.
முற்றத்தில், காற்று
வீசாத நேரத்தில்,
மரக்கட்டை மேஜையில்
புதிதாக வாங்கிய பழைய கம்ப்யூட்டரின் அழுக்கேறிய விசைப்பலகையில்,
விரைந்துலாவ மறுக்கின்றன எனது விரல்கள்.

பனி பொழியும் தொலைதூரத்து நகரத்தின்
நூறாம் சாலையின் ஆயிரமாம் அறையிலிருந்து
அரட்டையில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான்
என் நண்பன்.
நான் மீண்டும் மறந்துவிட்டேன் பாஸ்வேர்டை.
மறவா பாஸ்வேர்ட் அமைக்க முன்பு காதலிகள்
எவரையேனும் கொண்டிருக்கவில்லை.
அவனது வானமெல்லாம் நிலாக்கள்.

இடிந்து தொங்கிக்கொண்டிருக்கும் இறவானத்தின்
வழியாக என்னால் பார்க்க முடிந்த தொலைதூரம்
மேகங்களுக்குச் சொந்தமானது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் ஜாவாவிலும்
ஙகர கெட்ட வார்த்தைகளைச் சொல்லத்தெரிந்த,
அவனுக்கோ
அவற்றுக்கு மேல் செல்லும் விமானங்களும் சொந்தம்.

இரண்டு மதிப்பெண்களில் தொலைத்துவிட்டேன்
அவனது நிகழ்காலத்தை.
மேகங்களுக்கு மேல் ஒரு தெனாவட்டை.
பித்து

பூக்காத கொடூரம் அது.
நீ, புழுங்கு அறைக்கனவுகளில் என்னைத் தொல்லை செய்ததில்லை.
மற்றவர்களைப் போல என்னைப் பைத்தியமாக்கவில்லை
கொண்டாட வேண்டிய இடுப்பு இது
என்று உன் பின்னால் நான் ஓட வேண்டியிருந்ததில்லை.
காதல் கடிதங்கள், காற்றோடும் கண்ணடிப்புகள் ஏதுமில்லை.

அந்த கடைசி விநாடிகளால் மட்டுமே
நான் பிணமாகிக் கிடக்கிறேன்.
நீ ஆயிரமாவது வாடிக்கையாளர் என்றாய்.
நிஜமாகவே புணர்ந்தாய்.
இன்றோடு இத்தொழிலுக்கு முழுக்கு என்றாய்.

ஒரு கொத்து புல்லட்களை
நீயே உன் யோனிக்குள் தூவிச்சிதற்றும் முன்,
மரணவாடை வீசாத முகத்துடன்,
நீ கேட்டாய் ஒரே ஒரு உண்மை முத்தம்.
விலைமாது ஒருத்தி விரும்பிக் கேட்டுப்பெற்ற ஓரே முத்தம்.
உனது ஆயிரமாவது பொய்க்காதலனால்
முன்னறியப்படமுடியாத தருணத்தில்,
முத்தத்தால் இன்புறுவாய் என எண்ணியிருந்த நொடியில்,
உள்சிதைந்து இறந்தாய்.
ஆயிரம் காதலற்ற இரவுகளின் கதையை நீ முடித்த விதம்,
நூறாயிரம் துயரகாவியங்களினும் பெரிது.

பித்து பிடித்தலைகிறேன் நான் இன்று.
காதலற்ற, காமமற்ற, காத்திருத்தலற்ற
பித்து பிடித்து.

கதைசொல்லி

காட்டு ராசா. வன ராணி.
சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய்.
ஏரி, முழுவதிலும் ஆகாயத் தாமரை.
செக்கர்வானம். நெடுந்தொடர் மலை.
விரியாழி. பனிப்பாறை, நீர்மூழ்கும் கடற்கன்னி.
மகாராணி வசிக்கும் நூறுமாடி கோட்டை.
பேய், கடவுள், சித்திரக்குள்ளர்கள், சின்ட்ரெலா.
இவற்றின் விசித்திரங்களை
நான் என் மகளுக்குச் சொன்னபோதைவிட
அவள் எனக்குச் சொன்னபோதுதான் –
கதை இருந்தது.

 

 

 

 

 

 

1 Comment »

  1. மிக அழகான கவிதைகள் செந்தில்.. ‘கதைசொல்லி’ என்னை மிகவும் கவர்ந்தது..

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a comment