1000 நாளில் 1,00,000 தமிழ்க் கட்டுரைகள் – விக்கிபீடியாவில்…

சென்னையில் நேற்று நடந்த, பன்னாட்டுத் தாய்மொழி நாள் சிறப்புச் சந்திப்பு கிட்டத்தட்ட வெற்றிகரமாகத்தான் நடந்தது என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்ச்சியின் இறுதியில்

விக்கிபீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகளை வெளியிடுதற்கான இயக்கம் ஒன்றைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முதலில் நிகழ்ச்சிக்கான பின்புலம்:

பன்னாட்டு தாய்மொழி நாளை ஒரு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது. இந்த ஆண்டு அதை பெரிய அளவாக இல்லையென்றாலும் சிறு

அளவிலாவது நினைவுகூர வேண்டும் என்று தோன்றியதால் ஒரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்ய முயன்றேன். ஆர்வம் உள்ள நண்பர்கள் அதை வெற்றிகரமான ஒரு சந்திப்பாக

ஆக்கிவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

பிப்ரவரி 21 – வியாழன் வேலை நாள் என்பதால் பலருக்கு வரவாய்ப்பில்லாமல் போனது என்றாலும், வந்திருந்தவர்கள் பல் வேறு துறையினராக இருந்தது சிறப்பு. சூளைமேடு நெல்சன்

மாணிக்கம் சாலையில் சாஃப்ட்வியூ விஷுவல் கம்யூனிகேஷன் நிறுவனம் அன்புடன் அளித்த இடத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து தினமணி்க்காக நான் எழுதிய கட்டுரை ஒன்று வரக்கூடும். வந்த பிறகு அதை வலையேற்றுகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், 1952 இல் பிப்ரவரி 22 ஆம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷில்), உருது மொழித்திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில்

பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். அந்த நாளை முன்னிட்டு, 1998 இல் யுனெஸ்கோ அமைப்பு பன்னாட்டு தாய்மொழி நாள் என்ற புதிய தினத்தை அறிவித்தது. சிறுபான்மையர் மொழிகள்,

சிறு மொழிகள், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள், இன மொழிகள் என பலவித பெயர்களில் அறியப்படும் மொழிகளையும் பிற மொழிகளையும் அந்தந்த மொழியினர் கொண்டாட

வேண்டியதற்கான அவசியம் எழுந்திருப்பதே விசித்திரமான விஷயம் தான். காதல் காணாமல் போகும் போதுதானே காதலர் தினம் கொண்டாட வேண்டியிருக்கிறது!

சரி, நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வருவோம். வளர்தொழில் வெளியீட்டாளர் திரு ஜெயகிருஷ்ணன், சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்கள் தலைவர் திரு. மா

ஆண்டோபீட்டர், பிஎஸ்ஜி லெதர்லிங்க்ஸ் தலைவர் திரு மா சிவக்குமார், மின்வெளி நிறுவனத்தின் தலைவர் திரு பி தனபால், சன் நியூஸ் செய்தி ஆசிரியர் திரு. திருஞானம், தென்திசை பதிப்பாளர் திரு திருமாவேலன்,  தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் கஜேந்திரன், எழுத்தாளர்கள் சந்திரன், ஆதி வள்ளியப்பன், தமிழ் அன்பர்கள் ச.சிவகுமார், தமிழ் முகிலன், சுந்தரராஜன், பாலசுப்பிரமணியம்,  மொழிபெயர்ப்பாளர் மாரி கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

மொழி வளர்ச்ச்சியின் திசைவழியையும் அதன் சமூகப் பொருளாதார பின்புலம் குறித்தும், மொழி வள மேம்பாடு குறித்தும் ஒரு நீண்ட பவர்பாயின்ட் விளக்கக்காட்சியை நான் அளித்தேன்.

(அதை விரிவாக்கி விரைவில் இங்கே வலையேற்றுகிறேன்).

பிறகு மொழி மேம்பாடு குறித்த செயல்பாடுகளுக்கான பொதுவான அமைப்புரீதியிலான தேவைகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இன்னும் குறிப்பாக ஏதேனும் ஒரு செயல்பாட்டை

மையமாக வைத்து அமைப்பாக திரள்வது குறித்து பேசினோம்.

நீண்டகாலமாக என் மனதில் இருந்த ஒரு ஆசையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அப்போது உருவானது. அதாவது விக்கிபீடியா போன்ற உலகளாவிய முயற்சிகளில் தமிழின் பங்கு கூடுதலாக

இருக்கவேண்டும் என்பது குறித்து பல காலமாக சிந்தித்து உண்டு. தமிழ் இணைய மாநாடுகளில் இது குறித்து பேசியிருக்கிறேன். கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும்

இது குறித்து நிறைய பேசியிருந்தேன். அண்மைக்காலமாக, மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்கத் தளங்களில்,  பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine Translation), அகராதியாக்கம் போன்ற

செயல்பாடுகளில் தமிழில் கணிவழி பகுப்பாய்வுக்கு ஏற்ற நிலையில் நிறைய உரைத்தொகுப்புகள் (corpus) இல்லை என்பது குறித்து அந்த துறையில் இயங்கும் நிபுணர்களின் ஏக்கத்தை

பகிர்ந்துகொள்ளவேண்டிவந்தது. அரசும் பல்கலைக்கழகங்களும் உரிய அளவுக்கு தங்கள் கடமைகளை ஆற்றாதபோது, ஆர்வமுள்ள தனிநபர்களின் மீதுதான் பொறுப்பு விழுகிறது.

புராஜெக்ட் கூடன்பர்க், விக்கிபீடியா, விக்ஷனரி, வேர்ட்நெட் போன்ற உலகளாவிய முயற்சிகளினூடாக, அவற்றில் தமிழையும் இடம் பெறச்செய்வதன் மூலம், இவற்றை சாதிக்க முடியும் என்பது ஒரு வியூகம். ஆனால் இதைச் செய்வதற்கு பல தரப்பு ஒத்துழைப்பு வேண்டும். தனியாக ஒரு ஆளோ ஒரு நிறுவனமோ மட்டும் செய்கிற வேலை இல்லை இது. இந்த சிந்தனையிலிருந்து பிறந்தது தான் விக்கிபீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகரிப்பதற்கான ஆசை. இப்போது அதில் 10,000 க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் இருக்கின்றன. (அவற்றை முதலில் அதில் வெளியிட்டவர்களுக்கு முதற்கண் எமது நன்றிகள்).

ஆனால், செம்மொழித்தமிழுக்கு இந்த பத்தாயிரம் பத்தாது. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது தமிழில் வேண்டும். இந்த விருப்பத்தை ஒரு தி்ட்டமாக்கமுடியுமா என்று சந்திப்புக்கு வந்த நண்பர்களிடம் கேட்டபோது, உடனடியாக எல்லோராலும் அது வரவேற்கப்பட்டது. சில நிமிடங்களில் அதற்கான ஆதரவு அமைப்பாக வடிவம் கொண்டது. மா சிவக்குமார், ஜெயகிருஷ்ணன், தனபால், சந்திரன் உள்ளிட்ட அனைவரும் சில பூர்வாங்கப் பொறுப்புகளை ஏற்க முன்வந்தார்கள்.

தற்போதைக்கு ‘வலைக்களஞ்சியம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை அரசு, தனியார் உதவிகளுடன் இதை வெற்றிபெறச்செய்ய, ஒரு அமைப்பை உருவாக்க, நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து மார்ச் முதல்வாரத்தில் கூடிப் பேசலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் மட்டுமா? நீங்களும் தான். மா சிவகுமார் ஓரிரு நாளில் ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஆர்வமுள்ள அனைவரையும் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், விஷயஞானிகள் மட்டுமல்லாமல், பெருவாரியாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் நிபுணர்களும் பங்குபெற்றால் இந்த கனவு நனவாகும். எளிதில் உற்சாகம் தொற்றிக்கொள்கிற இலக்கு அல்லவா இது?

நிதி, தொழில்நுட்பம், உள்ளடக்கம், விளம்பரம், ஆதரவு என பல தளங்களிலிருந்து அதற்கு ஆதரவு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆயிரம் நாளில் லட்சம் கட்டுரைகள்! இலக்கு ஓர் இலக்கம் அல்லது லட்சம் கட்டுரைகளே லட்சியம் அல்லது ஆயிரம் நாளில் நூறாயிரம் உரைகள் என்பது போன்ற முழக்கத்தோடு அந்த முயற்சி தொடரும்.

இது குறித்து மேலும் விவரங்களை எதிர்பாருங்கள்.

உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்க்கிறோம். வழிநடத்தும் விழிகளையும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறாக, ஒரு வகையில், அந்தச் சந்திப்பு வெற்றிகரமான ஒன்றாகவே மாறியிருக்கிறது….

 அடுத்த ஆண்டு தாய்மொழி நாளை பெரிய அளவில் கொண்டாடமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.

Advertisements

19 Comments »

 1. நான் தயார்
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mariano_Anto_Bruno_Mascarenhas/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1

 2. இரு வருடங்களுக்கு முன், இந்திய மொழிகளில் தெலுங்கு முதலிலும் தமிழ் இரண்டாவது இடத்திலும் இருந்தது…

  இப்பொழுது மணிப்புரி மொழியில் தமிழை விட அதிகம் கட்டுரைகள் உள்ளன…

  தமிழார்வளர்கள் உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்

 3. zsenthil said

  நன்றி புருனோ. உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

 4. தற்பொழுது சென்னையில் ..

 5. விக்கிப்பீடியாவுக்கான ஆர்வலத் திட்டம் குறித்து அறிய மகிழ்ச்சி. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பலர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். அதனால், களத்தில் இறங்கி விழிப்புணர்வு பரப்ப இயலாத நிலை. அந்தக் குறையைப் போக்க உங்களின் பங்களிப்புகள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

  தமிழைக் காட்டிலும் சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகள் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், ஒட்டு மொத்த தர அளவீடுகளில் தமிழ் விக்கிப்பீடியா நல்ல நிலையில் இருக்கிறது. பார்க்க – http://ta.wikipedia.org/wiki/Wikipedia:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  நன்றி

 6. zsenthil said

  நன்றி ரவிசங்கர். இதை தொடர்ந்து செய்வதில் உள்ள பிரச்னைகளையும் வேலையின் கடுமையையும் தீவிரத்தையும் பொறுப்புணர்வையும் உணர்ந்தே தான் இருக்கிறோம். உங்கள் ஆதரவையும் நாடுகிறேன்.

 7. மயூரநாதன் said

  தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி நாலரை ஆண்டுகளை அண்மித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒழுங்கமைந்த முறையில் செயற்படும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் விக்கியின் தொடக்க காலம் முதலே தொடர்ச்சியான ஈடுபாடு கொண்டிருப்பவன் என்ற வகையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. உண்மையில் தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரை எண்ணிக்கையை ஒரு ஆண்டுக்குள் 50,000 ஆக உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்துத் தமிழ் விக்கிப்பீடியர்களிடையே கலந்துரையாடுவதற்கு எண்ணியிருந்தேன். அதற்கு முன் உங்கள் அறிவிப்பு வந்துள்ளது.

  தமிழை விட அதிக எண்ணிக்கையான கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்திய மொழிகளான தெலுங்கு, வங்காளம், மராட்டி, நேபாள் பாஷா, பிஷ்ணுப்பிரியா மணிப்புரி, ஹிந்தி போன்ற மொழிகளுக்கான விக்கிபீடியாக்கள், கட்டுரை எண்ணிக்கைகளை அதிகமாக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கில் தானியங்கி முறையில் கட்டுரைகளை ஆக்கின. ஆயினும் அவற்றின் தரம் பற்றியோ, பயன்படு தன்மை குறித்தோ அவை அதிக கவனம் செலுத்தவில்லை. தமிழ் விக்கியில் நாங்கள் தெளிவாக இருந்தோம். தானியங்கிகளைப் பயன்படுத்தி மட்டுமே கட்டுரைகளை ஆக்குவதால் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தமுடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதற்கு உள்ளடக்கச் செறிவு கொண்ட கட்டுரைகள் நிறைய ஆக்கப்படல் வேண்டும் இதற்கான ஒரே வழி பல துறைகளையும் சேர்ந்த வல்லுனர்கள் பலர் இங்கே பங்களிக்கத் தொடங்குவது தான். இதனைச் சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் நமது முக்கியமான செயற்பாடாக இருக்க வேண்டும். தானியங்கிகளையும் பயன்படுத்தலாம். ஆனால், ஒரே விதமான கட்டுரைகளையே பல்லாயிரக் கணக்கில் உருவாக்க முயலக்கூடாது. தானியங்கிகள் உருவாக்கும் கட்டுரைகளும் போதிய பயன்பாட்டுப் பெறுமானம் கொண்ட உள்ளடக்கங்கள் கொண்டவையாகவும், நியாயமான அளவு நீளம் கொண்டனவாகவும் இருத்தல் வேண்டும்.

  விரைவாகக் கட்டுரைகளை ஆக்கும் போது ஏற்படக்கூடிய வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக. இங்கே தற்போது சராசரியாக நாளுக்கு ஐந்து தொடக்கம் ஆறு கட்டுரைகள் வரை ஆக்கப்படுவதாகக் கொள்ளலாம். தற்போது ஆர்வமாக உழைக்கும் தமிழ் விக்கிபீடியர்கள் 10 – 15 வரைதான் உள்ளனர். தற்போதைய குறைந்த கட்டுரை ஆக்க வீதம் ஒவ்வொரு கட்டுரையையும் ஆர்வமாக உழைக்கும் ஒருவராவது கண்காணித்துக் கொள்ளவும் அவை பற்றிக் கலந்துரையாடவும் இடம் தருகிறது. முனைப்பான பங்களிப்பாளரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கட்டுரைகளை அதிகரிக்க முயலும்போது அவற்றைக் கண்காணிக்கும் வசதி இல்லாமல் போவதால், தரத்தைப் பேணுவது கடினமாக இருக்கும். எனவே கட்டுரைகள் ஆக்கும் வேகத்தை அதிகரிக்கும் போது முனைப்பாகப் பங்களிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

  எனவே தமிழ் விக்கிபீடியாவை வளர்ப்பதற்கான திட்டம் எதுவும் கட்டுரை எண்ணிக்கையையும், முனைப்பாகப் பங்களிப்பவர் எண்ணிக்கையையும் ஒருங்கே அதிகரிக்கும் வழிமுறைகளைக் கொண்டதாக இருப்பது அவசியம்.

  முக்கியமாக தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதில் நேரடியாக இணைந்து கொள்ள வேண்டும். இதன் செயற்பாடுகளிலும், கலந்துரையாடல்களிலும் பங்குபற்றத் தொடங்கவேண்டும். இது ஏற்கெனவே செயற்படுபவர்களுக்கு உந்து சக்தியாக அமைவதுடன், விக்கிபீடியாவுக்கு வெளியில் அது குறித்து என்ன நடைபெறுகிறது என அறியும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டும்.

 8. * எண்ணிக்கைக்கு அப்பால் தகவல்களைச் சரிபார்த்தல், சொற்பிழை பொருட்பிழை திருத்தல் எனத் தொடர்ந்து நிறையச் செய்ய வேண்டியிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  * தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இரு கலைக்களஞ்சிய வரிசைகளை வெளியிட்டு உள்ளதல்லவா? அவற்றை இணையத்துக்குக் கொண்டுவர தமிழக அரசைக் கோருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  //அதாவது விக்கிபீடியா போன்ற உலகளாவிய முயற்சிகளில் தமிழின் பங்கு கூடுதலாக இருக்கவேண்டும் என்பது குறித்து பல காலமாக சிந்தித்து உண்டு. தமிழ் இணைய மாநாடுகளில் இது குறித்து பேசியிருக்கிறேன். கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் இது குறித்து நிறைய பேசியிருந்தேன். அண்மைக்காலமாக, மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்கத் தளங்களில், பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine Translation), அகராதியாக்கம் போன்ற செயல்பாடுகளில் தமிழில் கணிவழி பகுப்பாய்வுக்கு ஏற்ற நிலையில் நிறைய உரைத்தொகுப்புகள் (corpus) இல்லை என்பது குறித்து அந்த துறையில் இயங்கும் நிபுணர்களின் ஏக்கத்தை பகிர்ந்துகொள்ளவேண்டிவந்தது
  //

  இவை தொடர்பாக விரிவான பதிவுகள் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலச்சுவட்டில் வெளியான “… தமிழ் டவுண்பஸ்” நல்ல கட்டுரை.

  உரைத்தொகுப்புக்கள், உள்ளடக்கம் இல்லையென்பதற்கு முதல் அவற்றின் தேவை குறித்துக்கூட இன்னும் தமிழில் விரிவாக அலசப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

 9. zsenthil said

  திரு மயூரநாதன்,

  உங்கள் கருத்துக்கு நன்றியும் மனமார்ந்த வரவேற்பும். உங்களைப் போன்ற முன்னோடி விக்கிபீடியர்களின் ஆதரவு இருக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு. நீங்கள் முன்வைத்திருக்கும் முயற்சிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.

  1000 நாளில் 1,00,000 கட்டுரைகள் திட்டத்துக்காக உருவாகிக்கொண்டிருக்கும் அமைப்பு ஒன்றில் நீங்கள் பங்கேற்கவேண்டும். இதுவரை விக்கிபீடியாவில் பங்கேற்ற பலரும் பங்கேற்கவேண்டும் என்று விழைகிறோம். பங்கேற்றோர் மின்னஞ்சல் முகவரி பட்டியல் இருந்தால் அனுப்பிவையுங்கள்.

  இந்த முயற்சி குறித்த மேலதிக தகவல்களை முதலில் எனது வலைப்பதிவிலும் பிறகு இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படப்போகும் பொது வலைப்பதிவிலும் வெளியிடுவோம்.

  நன்றி. மிகவும் மகிழ்ச்சி.

 10. zsenthil said

  திரு. கோபி,

  நன்றியுடன் உங்கள் கருத்துகளை எதிர்கொள்கிறேன். தஞ்சை கலைக்களஞ்சியத்தை வலையேற்றுவது குறி்த்தும் யோசித்து வருகிறோம். இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்களை உங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன். அணி சேருங்கள்.

  பிழைதிருத்தம், தகவல் திருத்தம் போன்ற விஷயங்களை விக்கிபீடியா எவ்வாறு கையாள்கிறதோ அதே கோட்பாடுகளை தமிழிலும் பயன்படுத்தலாம்.

 11. மயூரநாதன் said

  தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களில் முனைப்பாகப் பங்குபற்றும் ஆர்வம் எனக்கு உண்டு. உங்கள் திட்ட விபரங்களை எனக்கு அறிவியுங்கள். தமிழ் விக்கியில் முனைப்பாகப் பங்களிப்பவர்கள் அனைவரையும் இத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுட் பலருக்கு நீண்டகாலம் இதன் வளர்ச்சியில் முனைப்பாக உழைத்த அனுபவமும், ஆர்வமும் உண்டு. உங்கள் திட்டங்களைப் பற்றிக் கீழுள்ள இணைப்பின் மூலம் தமிழ் விக்கியின் ஆலமரத்தடி பகுதியிலும் நேரடியாகவே கலந்துரையாடலாமே. http://ta.wikipedia.org/wiki/Wikipedia:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF

 12. வலைக்களஞ்சிய முயற்சியை முன்வைத்துத் தமிழில் இணைய உருவாக்கம் தொடர்பிலான எனது கருத்துக்களைத் திண்ணையில் எழுதியுள்ளேன். http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802271&format=html

  அது விரிவான கட்டுரை அல்லவெனினும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். உரையாடல் தொடருவது நல்லது.

  //மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்கத் தளங்களில், பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine Translation), அகராதியாக்கம் போன்ற செயல்பாடுகளில் …//

  விரிவான கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

 13. zsenthil said

  அன்பின் கோபி,

  திண்ணைக் கட்டுரையைப் படித்தேன். உண்மையில் மிகவும் பயனுள்ள யோசனைகள்.

  இன்னும் இரண்டொரு நாளில் விரிவான பதிலை இடுகிறேன்.

  விக்கிப்பீடியாவில் 1000 நாளில் 1,00,000 லட்சம் பக்கங்கள் என்பது குறித்து அவசரப்பட்டோ திட்டமிடாமலோ நான் பேசிவிடவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருந்த பல யோசனைகளையும் முன்பு சிந்தித்திருக்கிறேன்.

  அவற்றோடு, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அநேகமாக இரண்டொரு நாளில் அதை முடித்து உங்களுக்கும் அனுப்புகிறேன். வரும் ஞாயிறன்று இது குறித்த ஒரு கலந்துரையாடலை சென்னையில் மேற்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது. நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? உங்கள் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்.

  மொழிசார் மென்பொருள் தளங்கள் குறித்து விரைவில் எழுத முயல்கிறேன். கடுமையான பணி நெருக்கடிகளின் நடுவில் காலதாமதம் தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

 14. செ. இரா. செல்வகுமார் said

  செந்தில்நாதன்,

  உங்களை நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருவது. 100,000 கட்டுரைகள் திட்டத்துக்கு
  என் வாழ்த்துக்கள். கட்டாயம் இயலும். கூட்டுழைப்பு தர
  அணியமாய் இருக்கின்றோம். 1000 ஆர்வலர்கள் வந்தால்,
  ஒவ்வொருவரும் 10 நாட்களுக்கு ஒரு முறையாக ஒரு
  5 வரி கட்டுரை எழுதினாலும் 1000 நாட்களில் 100, 000 கட்டுரைகளை எட்டிவிடலாம். 500 பேர் முன் வந்தால், ஒவ்வொருவரும் 5 நாட்களுக்கு ஒரு முறையாக
  ஒரு கட்டுரை வரைய வேண்டும்.
  50 பேர் தான் முன் வருவார்கள் என்றால் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 2 கட்டுரைகள் எழுத வேண்டும் (இது 1000 நாட்களுக்கு தாங்குமா என்பது கூறுவது கடினம் – ஆனால் இயலாதது அல்ல). எனவே சிறுதுளி பெரு வெள்ளமாக திரள,
  100-200 ஆர்வலர்களாவது முன்வர வேண்டும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாகிலும், ஒரு 15 மணித்துளிகள் ஒதுக்கும் வசதி வேண்டும். ஓரளவிற்குப் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். சிலர்
  10 ஆவது வரை படித்திருந்தாலும் கூர்ந்தெண்ணுபவர்களாகவும், நன்கு எழுதும் வல்லமை உள்ளவர்களாகவும் இருப்பர். எனவே
  100 முதல் 300 ஆர்வலர்களைத் திரட்ட வேண்டும். அவர்களுக்குப் போதிய உதவிகள் செய்து, வழிநடத்த ஊக்கமும் உழைப்பும் தருதல் வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் இப்பொழுதுள்ள 10-15 ஆர்வலர்கள் கட்டாயம் தங்களால் ஆன உதவிகள் தருவர்.

  அன்புடன் செல்வா

 15. T.Mugeshvelu said

  i am very happy to this plan , i also ready to participate this plan now i am in chennai (seven wells) my mobile number is 9444107920)

 16. மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  கோபி சொன்னது கவனிக்கவேண்டிய கருத்து.
  ஏற்கனவே கலைக்களஞ்சிய நோக்கத்தோடு ஆய்வுகள் செய்து அரசும் பல்கலைக்கழகங்களும் கலைக்களஞ்சியங்களை வெளியிட்டுள்ளன.

  பெரும் உழைப்பொன்று அங்கே ஏற்கனவே செலுத்தப்பட்டுமுள்ளது. ஒரு லட்சம் கட்டுரைகளுக்குச் செலுத்த வேண்டிய உழைப்பின் ஒரு பகுதியை, அக்கலைக்களஞ்சியங்களின் உள்ளடக்கத்தை விக்கிபீடியாவுக்கு கொண்டு வருவதற்கான அனுமதி வேண்டுவதற்கும், கருத்தாதரவு தேடுவதற்கும் செலவிட்டால் அதன் பயன் மிகப்பெரிது.

  செய்யவேண்டியதெல்லாம் அதனைப்பார்த்துத் தமிழில் தட்டெழுதுவது மாத்திரமே.

  பின்னர் புதிதாக கட்டுரைகள் உருவாக்குவதிலும் கவனத்தைச்செலுத்தலாம்.

 17. ஏதும் முன்னேறம், துவக்கப் பணிகள் குறித்து அறிய ஆவல். இத்திட்டத்தின் முன்னேற்றங்கள், தேவைகள், நடப்புகள் குறித்து ஏதேனும் ஒரு பக்கத்தில் தொடர்ந்து இற்றைப்படுத்தி வந்தால் நன்றாக இருக்கும்.

 18. M.G.VINOODH said

  its pretty awesome

 19. பரிதிமதி said

  செந்தில்நாதன்,
  மக்கள் தொலைக்காட்சியில் உங்கள் நேர்காணல் கண்டேன். மிகச்சிறந்த கருத்துகளை வைத்தீர்கள்.

  ’’1000 நாளில்…’’ திட்டம் எந்த நிலையில் உள்ளது? (தமிழ் விக்கிப்பீடியர்களுள் ஒருவன் என்ற முறையில் இதன் வளர்ச்சி குறித்து அறிய ஆவலுடன் உள்ளேன்.

  ’’வலைக்களஞ்சியத்தில்’’ பங்கு கொள்ள எந்த வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்?
  நன்றி.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: