Archive for March, 2009

ஒரே நாளில் உலகத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா?

ஒரு வேண்டுகோள்: இந்த இடுகையை ஒரு மின்னஞ்சலாக்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு அனுப்பிவையுங்கள்.

ஈழ மக்களின் துயர்துடைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகிறார்கள்.  ஈழ, தமிழக மக்கள் மட்டுமில்லாமல்,  மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களும் இந்த போராட்டத்தில் குதித்துவருகிறார்கள்.

தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.  ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில், தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தைகளுக்கு நெருக்கடி கொடுக்க உதவும். 

எனவே ஒரு குறிப்பிட்ட ஒரே நாளில் இந்தியா, இலங்கை, மேற்குலகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், செஷல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி,  கயானா உள்ளிட்ட எல்லா நாடுகளில் உள்ள தமிழர்கள் 24 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினால் அது சர்வதேச சமூகத்தின் கவனத்தையீர்க்கும். 

எட்டு திக்கும் மதயானைகள் என ஈழத் தமிழர்களின் உலகப் பரவல் குறித்து ஒரு முறை கி பி அரவிந்தன் எழுதியிருந்தார். பிரிட்டிஷாரின், பிரெஞ்சுக்காரர்களின் கூலிகளாகப் போயிருந்தாலும், அவர்களின் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்குப் பிறகும்,  சூரியன் மறையாத உலகில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இதுவரை அது காணாத இனப்படுகொலையிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில், உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் ஒன்றுதான் இப்போதைக்குப் பலன் அளிக்கும். தேர்தல் விளையாட்டில் இறங்கியிருக்கும் இந்தியாவிலிருந்து இனி பெரிய அளவிலிருந்து எதிர்பார்க்கமுடியாத போது, அந்த கடமை பிற உலகத் தமிழர்களிடம்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.

இப்போதைய தேவை உலகத் தமிழின ஒற்றுமை. அதன் ஒரு அடையாளமாக ஒரே நாளில் ஃபிஜி முதல் கலிஃபோர்னியா வரை ஒரு உண்ணாநிலைப் போராட்டம்.  அல்லது இதுபோன்றதொரு வேறு வடிவத்தினாலான போராட்டம்.

இது சாத்தியமா? இது சாத்தியப்பட்டால் ஓபாமாக்களையும் சோனியாக்களையும் நெருக்கலாம்.

அன்புடன்

செ. ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்

Comments (3)

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி பரிசளிப்பு விழா

எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும் அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009 அறிவியல் புனைகதைப் போட்டி

பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்பி மீண்டும் வலது பக்கம் திரும்புக.

நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை

வரவேற்புரை
திரு செ.ச. செந்தில்நாதன்

பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்

அறிமுகவுரை
திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்

கலைஞர் தொலைக்காட்சி

சிறப்புரை
பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு

வாழ்த்துரைகள்
திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்

திரு. வஸந்த், இயக்குநர்

திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்

திரு. இரா. முருகன், எழுத்தாளர்

ஏற்புரை
திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை

நன்றியுரை
திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்

நன்றி, அனைவரும் வருக!

போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009

கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.

உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு

இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு

சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு

இலங்கை
திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை

வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா

ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா

ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

Leave a Comment