Archive for May, 2008

மியான்மர் புயலுக்கு 40,000 தமிழர் பலி, 1,00,000 பேர் வீடிழப்பு

புயலின் சோகம்

இந்த அதிர்ச்சி மிகுந்த தகவல் தமிழ் கூறு நல்லுலகத்தை எட்டியிருப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் அடித்து ஓய்ந்த நர்கீஸ் புயல் மியான்மரில் லட்சத்துக்கு மேற்பட்டவரை காவு கொண்டது அனைவரும் அறிந்ததே. அதில் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நர்கீஸின் கொடுங்காற்றில் சிக்கிய பெரும்பாலான இடங்களில் தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் முற்றிலும் அழிந்துபோயிருக்கின்றன.

தமிழக முதல்வர் கலைஞருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளரும் மனித உரிமை செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான து. ரவிகுமார் எழுதியிருக்கும் மடல் கீழே. மணிப்பூரில் மோரே நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் புயல் சேதம் குறித்து அளித்த நிவாரண உதவிகள் பற்றிய செய்திக்கான இணைப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.

திரு ரவிகுமார் இது குறித்து நிவாரண உதவி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அவருக்கு நாம் அனைவரும் உதவுவது நம் கடமை. பர்மா தமிழர்களின் சோகம் பற்றி வேறு தகவல் கிடைத்தால் தயவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

திரு ரவிக்குமார் மடல்:

 

து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்

காட்டுமன்னார்கோயில்

பொதுச்செயலாளர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

27-05-08

மாண்புமிகு

முதலமைச்சர் அவர்கள்

தமிழ்நாடு

பொருள்: மியான்மர்-நர்கீஸ் புயலில் தமிழர்கள் பாதிப்பு-நிவாரண உதவிகள் தொடர்பாக

வணக்கம்

மியான்மர் நாட்டைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு அங்கு வாழும் தமிழர்கள் பலியாகியுள்ளனர். அங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டிக்கொண்டுள்ளது. அதில் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள் இறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

     நர்கீஸ் தாக்கியதைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐ.நா.சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும்கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மியான்மரில் ஐராவதி டெல்டா பகுதியும், பகோ மாகாணமும், யாங்கூனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தாம் நர்கீஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன(பார்க்க: வரைபடம்) அந்த பகுதிகள் யாவும் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். தமிழர்களின் கிராமங்களான கையான், சௌதான், தல்லா, இராவடி, தோங்குவா, தங்கி, திங்காஜூன், டவுன்டகோன், முதலியவை முற்றாக அழிந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. பகோ மாகாணத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யாங்கூனில் சுமார் இருபது சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இதுதவிர பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான தமிழர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மியான்மரில் தற்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர் நர்கீஸ் புயலுக்கு பலியாகி இருப்பது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

     மியான்மரின் இராணுவ அரசாங்கம் சரிவர மீட்புப் பணிகளைச் செய்யாததால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. உப்பு ஒரு கிலோ மியான்மர் பணத்தில் 1500.00 ரூபாய் விற்கிறது. ஒரு லிட்டர் குடி தண்ணீர் மியான்மர் பணத்தில் 1200.00 ரூபாய். பால்பவுடரின் விலையோ ஒரு கிலோ பத்தாயிரத்துக்கும் அதிகம்.

     மியான்மரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சேகர், செயலாளர் ரவிச்சந்திரன், அதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு.யூசுப், மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் சப்-கலெக்டராகப் பணிபுரியும் திருமதி.ஜெஸிந்தா லசாரஸ் I.A.S  ஆகியோரிடம் தொலைபேசியில் விசாரித்து இந்தத் தகவல்களைப் பெற்றேன். மியான்மர் தமிழர்கள், உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் மேலும் உயிர் இழப்புகளை சந்திக்கும் அவல நிலையில் உள்ளனர்.

     உலகத் தமிழர்களின் நம்பிக்கையாய் விளங்கும் தமிழினத் தலைவரும், தமிழக முதல்வருமான தாங்கள் மியான்மரில் தவிக்கும் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகளை அனுப்பிட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.   

நன்றி

பணிவோடு

து.ரவிக்குமார்

27.05.08

மோரே தமிழர் உதவி குறித்த செய்தி:

http://e-pao.net/GP.asp?src=8..140508.may08

Leave a Comment

பீட்டா கவிதைகள் 3.1

ஒரு கல்யாண்ஜி கவிதை

கல்யாண்ஜி சொன்ன
நான்கு சுவர்களும் சொந்தமில்லாத அடுக்கக வீடு,
கேப், அலுவலகம், மால் என
நிழல் விழா வாழ்வின் இருள்வெளிகளில்,
கல்யாண்ஜி பார்த்த
பாம்புப் பிடாரனும் குறிசொல்பவனும்
வருவதற்கு இடம் தராத
இந்த கேட்டட் கம்யூனிட்டியின் குறுங்குளத்தின் கரையில்,
கவிதை வராமலில்லை.

நீங்கள் செல்லத்துணியாத பாதையில் உங்கள் பேரன்
சென்று,
திரும்பவியலாத் தொலைவில் வாங்கிப் போட்ட
புதியதோர் அடுக்கத்திலும்,
அதே பூசணிக்காய்தான் தொங்குகிறது.
இருப்பது அவன் புது மனைவி மட்டும்
கூடவே மாமியார், அவர் வீட்டு பூனைக்குட்டி.

அரபுப் பாலையோ
ஸ்ட்ரைட் கரையோரமோ
மிஸ்ஸிபி தீரமோ
அலைந்து திரிகிற,
இரு வாரம் விடுப்பில் மணம் புரிந்து, 
உச்சம் புரியாது சென்றுவிட்ட,
புது மனைவியின் புதுப்புருஷனின்
பிருஷ்டத்தில்
அன்று கணக்காசிரியர் விசிறித்தள்ளிய
பிரம்பின் தழும்பு இன்னமும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது
தங்கவேட்டையின் விதிகளை.

வெற்றியின் தோல்விகளைப் புரிந்துகொள்ளும்
கணத்தில்,
புது மனைவியின் மனத்தில்
இன்னமும் எழுகின்றன கவிதைகள்.
எழுதமட்டும் தான் முடியவில்லை
கல்யாண்ஜியின் பென்சில் இல்லாததால்.

Leave a Comment

பீட்டா கவிதைகள் 3

தவறியது

ஒரே ஒரு ஆள், நான் மட்டுமே.
முற்றத்தில், காற்று
வீசாத நேரத்தில்,
மரக்கட்டை மேஜையில்
புதிதாக வாங்கிய பழைய கம்ப்யூட்டரின் அழுக்கேறிய விசைப்பலகையில்,
விரைந்துலாவ மறுக்கின்றன எனது விரல்கள்.

பனி பொழியும் தொலைதூரத்து நகரத்தின்
நூறாம் சாலையின் ஆயிரமாம் அறையிலிருந்து
அரட்டையில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான்
என் நண்பன்.
நான் மீண்டும் மறந்துவிட்டேன் பாஸ்வேர்டை.
மறவா பாஸ்வேர்ட் அமைக்க முன்பு காதலிகள்
எவரையேனும் கொண்டிருக்கவில்லை.
அவனது வானமெல்லாம் நிலாக்கள்.

இடிந்து தொங்கிக்கொண்டிருக்கும் இறவானத்தின்
வழியாக என்னால் பார்க்க முடிந்த தொலைதூரம்
மேகங்களுக்குச் சொந்தமானது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் ஜாவாவிலும்
ஙகர கெட்ட வார்த்தைகளைச் சொல்லத்தெரிந்த,
அவனுக்கோ
அவற்றுக்கு மேல் செல்லும் விமானங்களும் சொந்தம்.

இரண்டு மதிப்பெண்களில் தொலைத்துவிட்டேன்
அவனது நிகழ்காலத்தை.
மேகங்களுக்கு மேல் ஒரு தெனாவட்டை.
பித்து

பூக்காத கொடூரம் அது.
நீ, புழுங்கு அறைக்கனவுகளில் என்னைத் தொல்லை செய்ததில்லை.
மற்றவர்களைப் போல என்னைப் பைத்தியமாக்கவில்லை
கொண்டாட வேண்டிய இடுப்பு இது
என்று உன் பின்னால் நான் ஓட வேண்டியிருந்ததில்லை.
காதல் கடிதங்கள், காற்றோடும் கண்ணடிப்புகள் ஏதுமில்லை.

அந்த கடைசி விநாடிகளால் மட்டுமே
நான் பிணமாகிக் கிடக்கிறேன்.
நீ ஆயிரமாவது வாடிக்கையாளர் என்றாய்.
நிஜமாகவே புணர்ந்தாய்.
இன்றோடு இத்தொழிலுக்கு முழுக்கு என்றாய்.

ஒரு கொத்து புல்லட்களை
நீயே உன் யோனிக்குள் தூவிச்சிதற்றும் முன்,
மரணவாடை வீசாத முகத்துடன்,
நீ கேட்டாய் ஒரே ஒரு உண்மை முத்தம்.
விலைமாது ஒருத்தி விரும்பிக் கேட்டுப்பெற்ற ஓரே முத்தம்.
உனது ஆயிரமாவது பொய்க்காதலனால்
முன்னறியப்படமுடியாத தருணத்தில்,
முத்தத்தால் இன்புறுவாய் என எண்ணியிருந்த நொடியில்,
உள்சிதைந்து இறந்தாய்.
ஆயிரம் காதலற்ற இரவுகளின் கதையை நீ முடித்த விதம்,
நூறாயிரம் துயரகாவியங்களினும் பெரிது.

பித்து பிடித்தலைகிறேன் நான் இன்று.
காதலற்ற, காமமற்ற, காத்திருத்தலற்ற
பித்து பிடித்து.

கதைசொல்லி

காட்டு ராசா. வன ராணி.
சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய்.
ஏரி, முழுவதிலும் ஆகாயத் தாமரை.
செக்கர்வானம். நெடுந்தொடர் மலை.
விரியாழி. பனிப்பாறை, நீர்மூழ்கும் கடற்கன்னி.
மகாராணி வசிக்கும் நூறுமாடி கோட்டை.
பேய், கடவுள், சித்திரக்குள்ளர்கள், சின்ட்ரெலா.
இவற்றின் விசித்திரங்களை
நான் என் மகளுக்குச் சொன்னபோதைவிட
அவள் எனக்குச் சொன்னபோதுதான் -
கதை இருந்தது.

 

 

 

 

 

 

Comments (1)