BhashaIndia.com இன் Localization குளறுபடி

bhashaindia.jpg

Localization – இது பற்றி மென்பொருள் உலகில் கடந்த ஒரு பதிற்றாண்டாக நிறைய பேச்சு. எல்லா நாடுகளையும் மதித்து கலாச்சாரங்களையும் காப்பாற்றி மொழிகளையும் பேணி பல்கலாச்சார உலகைக் கொண்டாடுவோம் என்று உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் சொல்லிக்கொண்டுவருகிறார்கள். சொல்லப்போனால் நிறைய செய்தும் வருகிறார்கள். மைக்ரோசாஃப்ட்,  சன், நோகியா, கூகிள், ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் Localization என்கிற இந்த உள்ளூர்மயமாக்க முறை மூலம் அந்தந்த நாடுகளின் சந்தைகளிலும் மேலும் பரவிச்செல்ல வழிவகைச் செய்துகொள்கிறார்கள்.

இந்த உள்ளூர்மயமாக்கமும் (அதற்கு பின்னால் இருக்கிற உலகமயமாக்கமும்) பல சிறிய நாடுகளில், கலாச்சாரங்களில், மொழிச் சமூகங்களில் புத்துணர்வை ஊட்டியிருப்பதும் உண்மை. இந்தியாவிலும் பல ஆசிய, ஆஃபிரிக்க நாடுகளிலும் இணையத்திலும் கணிப்பொறியிலும் பல மொழிகள் இடம்பெற யூனிக்கோடு போன்ற நுட்பங்கள்  உதவியிருக்கின்றன. 

தமிழ், அரபு, வியத்நாம், கசாக் என பல மொழியினர்கள் தங்கள் தங்கள் இலக்கிய, கலாச்சார பதிவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்த உள்ளூர்மயமாக்கம் உதவியிருக்கிறது. முதல் முறையாக இரண்டு நாளுக்கு முன் என் மனைவி அவரது சக ஊழியருக்கு நோகியா செல்பேசியில் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்பி, பதிலையும் பெற்றிருக்கிறார்.  

ஆனால், இந்தியாவில் எப்போதுமே இந்த உள்ளூர்மயமாக்கம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதற்கான ஆதரவும் குறைவுதான்.  ஐரோப்பாவிலும் தென்கிழக்காசியாவிலும் வர்த்தகரீதியில் வலுவாகவும் கலாச்சார ரீதியில் அதிமுக்கிய அம்சமாகவும் இருக்கும் உள்ளூர்மயமாக்க நடவடிக்கைகள் இந்தியாவில் மேம்போக்கானதாகவும் சடங்குத்தனம் நிறைந்ததாகவுமே உள்ளன. அதற்கு காரணங்கள் பல. அதில் முக்கியமானது இந்திய மென்பொருள் நிபுணர்களின் அக்கறையின்மை.

இதோ அதற்கு ஒரு உதாரணம்.  மேலே உள்ள திரை-படம்.  

 இது மைக்ரோசாஃப்ட் ஆதரவில் நடத்தப்படும் பாஷாஇந்தியா (www.bhashaindia.com) என்ற வலையகத்தில் ஒரு பக்கம். தமிழ் கலைச்சொற்கள் குறித்த பகுதி இது. இந்த படத்தில் உள்ள  தமிழ்நாடு என்றாலே பரத நாட்டியம் என்கிற டூரிஸ்ட்த்தனமான மேட்டிமை இமேஜ் ஒரு பக்கம் இருக்கட்டும். பின்னணியில் உள்ள எழுத்துக்களைப் பாருங்கள். எல்லாம் தெலுங்கு எழுத்துகள். இந்த பக்கத்தை வடிவமைத்தவர், அதற்கு ஓகே போட்டவர், பிறகு பார்த்தவர்கள் என பலருக்கும் இப்படி இருப்பது ஏன் உறுத்தவில்லை? தமிழ் வலைப்பக்கத்தில் தெலுங்கு இருக்கக்கூடாதா என்று அசட்டுத்தனமாக கேட்கக்கூடாது.  இருக்கலாம். காரணம் இருந்தால். ஆனால், இந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்கள் முதல் பாஷாஇந்தியாவின் பொறுப்பாளர்கள் வரை உள்ளூர்மயமாக்கக் கோட்பாட்டை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் தான் இந்த படம். அவ்வளவு அக்கறையின்மை! இப்படி ஒரு கூத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது.  இந்தியா போன்ற தாய்மொழி்யின் பலாபலன்களை அறியாத ஒரு நாட்டில்தான் பார்க்கமுடியும். இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான வலையகம் என்று சொல்லிக்கொள்ளும் பாஷாஇந்தியா.காமிலேயே இந்த நிலை என்றால்… வேறு என்ன சொல்ல? 

4 Comments »

  1. மிகமிக வயிற்றெரிச்சலாகவும் பயமாகவும் இருக்கிறது. உள்ளூர்மயமாக்கும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் வைத்துப் போலீஸ் வேலை செய்தால்தான் இந்த மாதிரி அராஜகங்களைத் தடுக்க முடியும். ஆனால் அந்த போலீஸ்காரர்களுக்கு மொழி அறிவு அல்லது சாதா அறிவு கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். Save as என்பதை “எனச் சேமி” என்று மொழிபெயர்க்கும் உலகமகா புத்திசாலிகள் யாராவது அவர்களுக்குக் கிடைப்பார்கள். முன்பு நாம் செய்த மொபைல் ஃபோன் பயனர் இடைமுக (!) மொழிபெயர்ப்பு வேலையில் திருத்தங்கள் என்ற பெயரில் பல வேடிக்கைகளைச் செய்த எடிட்டர்கள் ஓர் உதாரணம்.

    பாஷா இந்தியா மொத்த வலையகத்திலும் குப்பையான தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள். இலக்கணப் புத்தகம் ஒன்றிற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்புரையிலிருந்து இலக்கணமற்ற ஒரு வாக்கியம்: “இவ்வகையான டிஜிட்டல் பதிப்புகளாக புத்தகங்கள் வருவது மொழி வளர்ச்சிக்கு முக்கியமாக கணினி சார் மொழிவளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானதும் மற்றும் சிறப்பானதும் ஆகும்.” இது எப்படி இருக்கு?

    லோகலைசேஷனின் சாபக்கேடு, தமிழில் ஒழுங்காக ஒரு வாக்கியம் கூட எழுதத் தெரியாதவர்கள் ஏராளமானோர் அதில் ஈடுபட்டிருப்பதுதான்.

  2. “தெரியாதவர்கள் ஏராளமானோர்” = “தெரியாத ஏராளமானோர்”. இந்த ஒரு பிழைகளுக்கு மன்னிக்கவும்.

  3. [...] இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே [...]

  4. Vivetha said

    நெத்தியடி!

    தவறுகள் செய்பவர்களை வாய்மூடி பார்த்து கொண்டிருப்பவர்கள் ஒருரகம். அதை முறையிட்டு மாற்ற கூறுபவர்கள் ஒருரகம். நீ மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் அது சார்ந்த விழிப்பு நிலையை உருவாக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்துவேன் என பிறருக்கு எடுத்து கூறுபவர்கள் ஒருரகம்.

    பாஷா இண்டியாவை வெளிச்சம் போட்டு காட்டியது – மிக்க அருமை.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Comment