Localization – இது பற்றி மென்பொருள் உலகில் கடந்த ஒரு பதிற்றாண்டாக நிறைய பேச்சு. எல்லா நாடுகளையும் மதித்து கலாச்சாரங்களையும் காப்பாற்றி மொழிகளையும் பேணி பல்கலாச்சார உலகைக் கொண்டாடுவோம் என்று உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் சொல்லிக்கொண்டுவருகிறார்கள். சொல்லப்போனால் நிறைய செய்தும் வருகிறார்கள். மைக்ரோசாஃப்ட், சன், நோகியா, கூகிள், ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் Localization என்கிற இந்த உள்ளூர்மயமாக்க முறை மூலம் அந்தந்த நாடுகளின் சந்தைகளிலும் மேலும் பரவிச்செல்ல வழிவகைச் செய்துகொள்கிறார்கள்.
இந்த உள்ளூர்மயமாக்கமும் (அதற்கு பின்னால் இருக்கிற உலகமயமாக்கமும்) பல சிறிய நாடுகளில், கலாச்சாரங்களில், மொழிச் சமூகங்களில் புத்துணர்வை ஊட்டியிருப்பதும் உண்மை. இந்தியாவிலும் பல ஆசிய, ஆஃபிரிக்க நாடுகளிலும் இணையத்திலும் கணிப்பொறியிலும் பல மொழிகள் இடம்பெற யூனிக்கோடு போன்ற நுட்பங்கள் உதவியிருக்கின்றன.
தமிழ், அரபு, வியத்நாம், கசாக் என பல மொழியினர்கள் தங்கள் தங்கள் இலக்கிய, கலாச்சார பதிவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்த உள்ளூர்மயமாக்கம் உதவியிருக்கிறது. முதல் முறையாக இரண்டு நாளுக்கு முன் என் மனைவி அவரது சக ஊழியருக்கு நோகியா செல்பேசியில் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்பி, பதிலையும் பெற்றிருக்கிறார்.
ஆனால், இந்தியாவில் எப்போதுமே இந்த உள்ளூர்மயமாக்கம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதற்கான ஆதரவும் குறைவுதான். ஐரோப்பாவிலும் தென்கிழக்காசியாவிலும் வர்த்தகரீதியில் வலுவாகவும் கலாச்சார ரீதியில் அதிமுக்கிய அம்சமாகவும் இருக்கும் உள்ளூர்மயமாக்க நடவடிக்கைகள் இந்தியாவில் மேம்போக்கானதாகவும் சடங்குத்தனம் நிறைந்ததாகவுமே உள்ளன. அதற்கு காரணங்கள் பல. அதில் முக்கியமானது இந்திய மென்பொருள் நிபுணர்களின் அக்கறையின்மை.
இதோ அதற்கு ஒரு உதாரணம். மேலே உள்ள திரை-படம்.
இது மைக்ரோசாஃப்ட் ஆதரவில் நடத்தப்படும் பாஷாஇந்தியா (www.bhashaindia.com) என்ற வலையகத்தில் ஒரு பக்கம். தமிழ் கலைச்சொற்கள் குறித்த பகுதி இது. இந்த படத்தில் உள்ள ‘தமிழ்நாடு என்றாலே பரத நாட்டியம்‘ என்கிற டூரிஸ்ட்த்தனமான மேட்டிமை இமேஜ் ஒரு பக்கம் இருக்கட்டும். பின்னணியில் உள்ள எழுத்துக்களைப் பாருங்கள். எல்லாம் தெலுங்கு எழுத்துகள். இந்த பக்கத்தை வடிவமைத்தவர், அதற்கு ஓகே போட்டவர், பிறகு பார்த்தவர்கள் என பலருக்கும் இப்படி இருப்பது ஏன் உறுத்தவில்லை? தமிழ் வலைப்பக்கத்தில் தெலுங்கு இருக்கக்கூடாதா என்று அசட்டுத்தனமாக கேட்கக்கூடாது. இருக்கலாம். காரணம் இருந்தால். ஆனால், இந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்கள் முதல் பாஷாஇந்தியாவின் பொறுப்பாளர்கள் வரை உள்ளூர்மயமாக்கக் கோட்பாட்டை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் தான் இந்த படம். அவ்வளவு அக்கறையின்மை! இப்படி ஒரு கூத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது. இந்தியா போன்ற தாய்மொழி்யின் பலாபலன்களை அறியாத ஒரு நாட்டில்தான் பார்க்கமுடியும். இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான வலையகம் என்று சொல்லிக்கொள்ளும் பாஷாஇந்தியா.காமிலேயே இந்த நிலை என்றால்… வேறு என்ன சொல்ல?
