தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்

தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே தொழில்முனைவோர் என்று நான் சொல்வது தொழில் தொடங்குகிற அத்தனை பேரையும் அல்ல. தொழிலதிபராக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிஸினஸை செய்பவர்களை மட்டுமே. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நேற்றைய/இன்றைய வெற்றிகரமான முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. ஒருவகையில் அதில் சுயநலமும் இருக்கிறது.

நானும் ஒரு முதல் தலைமுறைத் தொழில்முனைவோன்தான். எனது தாத்தா காலம் வரை எங்கள் மூதாதையர்கள் பரம ஏழையான நெசவாளர்கள். எனது அப்பா நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து, வித்துவான் பட்டம் வாங்கி, ஆசிரியாக ஆனவர். அவர் ஓய்வு பெறும்போது தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா அஞ்சாங்கிளாஸ். எனது சொந்தத்தில் யாரும் பிஸினஸ் கிடையாது. தூரத்து சொந்தங்களில் சில வியாபாரிகள் உண்டு.  நான் ஒரு நல்ல டாக்டராகவோ பொறியாளராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆகவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. கொஞ்சகாலம் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் வேலை செய்த நான், பிறகு ‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’, பிஸினஸ் தொடங்கினேன்.  என் வாழ்க்கைத்துணைவியாரின் ஒரே ஆதரவைத் தவிர, எனக்கு வெளிப்படையான, மனப்பூர்வமான ஆதரவு என் சுற்றத்தில் யாருமில்லை. நாற்பது, அம்பதாயிரம் சம்பளம் வாங்க வேண்டிய புள்ளை, பிஸினஸ், அது இதுன்னு வாழ்க்கையை வீணாக்குகிறான் என்கிறார்கள் சிலர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டாமா என்றில்லாமல் இது என்ன வேலை என்கிறார் ஒருவர். டிரைவர்களெல்லாம் பஸ் ஓனர்களாக ஆக முயற்சிக்கக்கூடாது என்கிறார் என் அப்பா. இவ்வளவு வருஷம் ஆச்சு, பிஸினஸ் உனக்கு சரிப்பட்டு வராது, ஒழுங்கா வேலைக்குப் போ என்று அறிவுரைக்கும் நலன்விரும்பிகள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவி்ல் ஒரு பாட்டுக்குள் பணக்காரனாகும் வித்தை எனக்குத் தெரியவில்லை என்பதே ஆதங்கம். இதற்கிடையில் நாலஞ்சு வென்ட்ச்சர்களைத் தொடங்கி, அடிபட்டு, சற்றே தேறி, இப்போது ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஆழி என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன்.

 இன்று வெற்றிகரமாக பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்னை விட நிறைய கஷ்டங்களை அனுபதித்திருக்கிறார்கள்.  நிறைய rags to riches கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான ஒரு வழி தான் புத்தகம் எழுதுவது. இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்.

 ஆனால் இதில் உங்கள் உதவியும் தேவை

- நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

- அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அறிமுகப்படுத்துங்கள்

- நீங்கள் வியந்து போற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் – இன்றைய வெற்றிகரமான தொழிலதிபர்கள் – அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயமி்ல்லை- குறித்து டிப்ஸ் கொடுங்கள். அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடி, வலுவான தகவல் புலத்துடனும் அறிவுச் செல்வத்துடனும் அந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

கை கொடுங்களேன்!

7 Comments »

  1. prakash said

    //‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’//

    Entrepreneurial Bug என்கிறதை என்ன அழகாக மொழிபெயர்ப்பு செஞ்சிருக்கீங்க :-)

    //நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்//

    நான் கூட ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோன் தான்… என்ன மாதிரியான கருத்துக்கள், எப்படிச் சொல்லணும்ங்கதை கொஞ்சம் தெளிவா ஸ்கெட்ச் போடுங்க

  2. zsenthil said

    நன்றி பிரகாஷ். சீக்கிரம் ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தருகிறேன். மொத்தத்தில் நம்மோட பிரச்னை ஐம்பது சதவீதம் புறப் பிரச்னை. அரசு, நிர்வாகிகள், வங்கிகள், நிதி, விற்பனை, போட்டி, சப்ளை செயின், விற்பனை வரிசையில் ஏமாற்றும் நிறுவனங்கள் என நிறைய இருக்கும். இன்னொரு 50 அக பிரச்னை. நம்மோட மனது, வீடு, நண்பர்கள், சுற்றத்தினர்கள் இவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள்… இப்படி.

    நீங்கள் என்ன தொழிலில் இருக்கிறீர்கள் என்று தெரியாது. zsenthil@gmail.com இல் ஒரு மடலிட்டால் நாம் அடுத்த கட்டத்துக்குப் போவோம். எல்லாவற்றையும் வலைப்பதிவிலேயே பரிமாறிக் கொள்வது சரியாக இருக்காது இல்லையா?

    வாங்க, வாங்க. காத்திருக்கிறேன். பேசுவோம்.

  3. அழகான ஆரம்பம் செந்தில், பதித்தவுடன், தமிழ்மணத்தில் போய் உங்கள் வலைப்பூ முகவரியை உள்ளிட்டால்தான் புதிய இடுகை முதல் பக்கத்தில் வரும். இனிமேல் நாள்தோறும் அதையும் செய்து விடுங்கள்.

    இந்தத் தடவை நானே செய்து விட்டேன் :-)

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

  4. zsenthil said

    吗老师, 谢谢您。 (ஆசான் மா சிவக்குமார் அவர்களே, நன்றி – மற்றவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்பு.).

    நேற்று உங்களுடன் கதைத்துவி்ட்டு திரும்பிய பிறகு, தெம்பாக இருந்தேன். சட்டென்று காரியத்தைத் தொடங்கிவிட்டேன். ஒரு சர்வே கேள்வித்தாளைத் தயாரித்து வருகிறேன். விரைவில் அதை முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு அனுப்பி வைக்கிறேன். சர்வேயிலிருந்து தொடங்கலாம்.

  5. mathy said

    நல்லதொரு தொடக்கம் செந்தில்.

    ஒரு வேண்டுகோள். வேர்ட்பிரஸ்ஸில், இடுகையை எழுதியபிறகு post-slugஇல் இடுகையில் தலைப்பை ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டால் (அல்லது தங்கிலிஷ்) நன்றாகவிருக்கும். பிறருக்குச் சுட்டியைக் கொடுக்கும்போது நீளமான வால் தொந்தரவாகவிருக்கிறது.

    நன்றி.

    -மதி
    http://mathy.kandasamy.net

  6. சென்செய் மா. சிவக்குமார் சொன்னதில் ஒரு சுட்டிக்காட்டல்: தமிழ்மணத்திற்கு பிளாகரின் atomதான் புரியும். வேர்ட்பிரஸில் பதிவுகள் போட்டால் அதை தமிழ்மணம் எடுத்துக்கொள்வதில்லை.

  7. வணக்கம் செந்தில் சார், நானும் உங்கள் பயிற்சி பட்டறையில் படித்தவன் என்பதால் சொல்கிறேன்.

    உங்களது தமிழாக்கம் பயிற்சி பட்டறையில்போதுதன் யுனிகோடு தமிழை வைத்து இவ்வளவு செய்யமுடியுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இப்போது அதை வைத்து நான் துவங்கியிருக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு உங்களது கருத்துக்கள்தான் என்பதை முன்னில் வைத்து இன்று பல்வேறு வடிவங்களில் இணையங்களை வடிவமைத்து அதன் மூலம் கிடைத்த நாளேட்ஜெ வைத்து இன்று இணைய தளங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளை செய்துவருகிறேன்.
    அதுவும் முழுவதும் முழுவதும் தமிழில் வணிகத்திற்குகென http://www.tamivanigam.in, என்ற தளதையும், வரும் நாளில் சில நிறுவனங்களின் உதவியோடு தமிழ் மருத்துவம் என்ற இணைய தளத்தையும் பின்னாலில் இதே போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இதேபோன்று இணைய தளங்களை உருவாக்க உள்ளேன்.
    அதோடு வரும்காலங்களில் கூகுள் தேடல்தளம் கூகிளில் நாம் இப்போது செய்துவரும் தேடல்களை குறிப்பிட்ட அளவில் மட்டும் கொடுத்துவிட்டு அதற்கு மேம்பட்டு போனால் பணம் கட்டடித்தான் வாங்க வேண்டுமாம். ஆகையால் ஒரு தேடல் தளத்தை உருவாக்க என்ன அதற்க்கான முயற்சிகளில் இறங்கி ஒரு வழியாக் ஒரு டெராபைட் கொண்ட சர்வர் வாங்கி ஆரம்பித்துவிட்டேன்.
    http://www.4rthestate.com/search/search.php

    உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    இப்போது நான் எனது தமிழ்தளத்திற்க்காக நான் எழுதிவரும் வந்தாரை வாழ வைத்து இருப்பொரை ஓட வைக்கும் தமிழகம் எனும் தலைப்பில் ஒரு கட்டுரயையை எழுதி வருகிறேன். அது முடிந்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
    நன்றி!

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Comment