இஃது அஃதன்று, அஃது வேறு.
அஃது உஃதன்று, இஃதுமன்று.
எஃது இஃதென்று அறியாத போது,
சிறுங்காதல் வந்து சிந்தையைக் குடைந்தது.
சிம்ரன், ஜோதிகா வரிசையினள் அவள்.
முகவரி அறியேன். பெயரும் தேடேன்.
கண் பார்த்த விஷயங்கள் போதும்.
பறந்து வந்த காற்றில்
பதிந்து சென்ற கண்ணோட்டம் போதும்
ஒரு செமஸ்டர்காலத்தில் அவளுடைய எதிரியாவது உறுதி.
புலமை படிக்க வந்தோனுக்கு
பொருளியல் மேல் என்ன ஆசை?
யாமோ, காமத்துப்பால் கசடற கற்றோன்.
தலைவியர் மடக்கும் தலைவன். எனினும்
பொருட்பாலள் மயக்கும் வித்தை அறிந்திலேன்.
கெய்னீசியன் கோட்பாடுகளைவிட
பெருமந்த காலத்தின் ஒப்பாரியைவிட
நியூயார்க் முதல் நியூயார்க் வரை
24 மணிநேர ஃபண்ட் மானேஜர்களின் கத்தல்களைவிட
சாலச்சிறந்ததோர் சரக்குண்டு எம்மிடம்.
அவள் வரமாட்டாள்.
யானோரு பி.பீ.ஓ. சரக்கல்லன்.
புங்கமரக்காட்டு கல்லூரியொன்றில்
தமிழ் விரிவுரையாளனாய் நாளை ஒருநாள்
தேமா, புளிமா போதிக்கக் காத்திருக்கும்,
இனிதிது, இன்னாதிதுவென
வறண்ட வகுப்பறையில் வளவளக்க தயாராகும்,
விதியின் கையாள் யான்.
நீர்வழி்ப்படும் புணைபோல்
ஓர் வழிப்பட்டு செல்லும் நாளை எதிர்நோக்கி நிற்போன்.
வாராள் என் தலைவி.
குறுந்தொகை கொண்டோன், சிலேடையில் சிறந்தவன்.
கார்மேகத்தின் அடிப்பொடி, குறவஞ்சியின் ரசிகன்.
ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன்
அவளை அழைப்பேன் சுவர்க்க வாயில்வரை.
கைவல்ய நவநீதம் காட்டி மகிழ்வேன்.
எல்லா சரக்கும் யாமறிவோம் எனினும்
யானோரு ஐ.டி. சரக்கல்லன்.
திருமால் அறிவேன், ஷாப்பிங் மால் அன்று.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிக.
காதல், இயற்கையிலேயே கண்டதும் வருமோ?
பின்புலம், முன்புலம், எதிர்நாள் ஏக்கம்
காத்தலின் நிச்சயம், கடவுச்சீட்டுகள்,
விசா, பிஸ்ஸா, சேஃபர் செக்சுமென
எல்லாம் முகத்தில் பிரதிபலிக்குமோர்
ஸ்டெல்லா மேரிசின் சிகைவண்ணம் மாற்றும்
செவ்விளங் குமரிக்கு?
தீயின் பிழம்பொன்று என்வயிறு புகுந்திட,
இன்று
காரில் வந்த ஓர் கயவன் அவளை
கொத்திச்செல்வதைக் கண்டேன்.
சாலமன் பாப்பையா சரியாய்ச் சொன்னார்:
அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா.
அவற்றாயும் இவற்றாயும் ஒரு கிளப்பின் மாக்கள்.
அந்தையும் இந்தையும் வரிகொடு வரம்பினர்.
ஆதலின்,
செம்புலப் பெயல்நீர் செப்படி வித்தை வேண்டாது,
இன்றைக்கு காலம் இனிதே நிறைய
டேட்டிங், ச்சாட்டிங், ஷாப்பிங், கீப்பிங்…
வாராள் தலைவி, வழிதவறினோளே.
எமக்கு,
எந்தையும் தாயும் தம்கடன் மறவாது,
தட்சணை அளந்து, தடவிப்பார்த்து
கொணர்வர் ஒரு குமரியை நாளை.
அஃது வரை,
எஃதும் நமதன்று, இஃதும் நமதன்றாதலின்,
காயத்ரிகளை வியத்தலும் இலமே.
கண்ணம்மாக்களை இகழ்தல் அதனினும் இலமே.
சாத்தான் said
நல்ல ஸ்டைல்!
zsenthil said
நன்றி. ஸ்டைலுக்காகவே மெனக்கெட்டு எழுதியது. இளங்கலை, முதுகலை தமிழ்மாணவர்கள் அல்லது சங்கத்தமிழ் இலக்கியம் பயின்றோர் மட்டும் புரிந்துகொள்ளத்தக்க உள்குத்துகள் இதில் உண்டு.
கலை அரசன் மார்த்தாண்டம் said
நன்று நன்று.
விக்ரம் said
அருமை. மேலும் வளரட்டும்.
http://thakaval.wordpress.com
Vijay said
இன்பத்தமிழும், இலக்கண ஒப்பனையும்,
தன்னிகரிலாக் காதலும்,
சிறிய ஏக்கமும்,
சிந்தனைகுரிய சில வார்த்தைகளும்,
மீண்டும் படிக்கத் தூண்டும் நடைமுறையும்,
நடைமுறையை விளக்கும் நளினமும் – சிறப்பு;
வளரட்டும் இதன் மறுபதிப்பு.
செந்தில்நாதன் said
நன்றி.